இடியாப்பம் சுவைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்

இடியாப்பம் சுவைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்

1 of 2
படம்: அதிபர் அலுவலகம்
படம்: அதிபர் அலுவலகம்

07 Nov 2026 - 10:00 pm

2 mins read

அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரர்களுக்குத் தமது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் சிறப்புக் காணொளி ஒன்றைத் தமது சமூக ஊடகப் பக்கங்களில் சனிக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில், அவர் தமது மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி, பன்மொழிப் புலமை கொண்ட உள்ளூர்க் கலைஞர் தாஸ் டிடி, தேசியக் கல்விக் கழகப் பேராசிரியர் சைரின் செலமாட் ஆகியோருடன் இணைந்து இடியாப்பம் சுவைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அதிபர் தர்மன், திரு தாஸ் டிடியுடன் போட்டிபோட்டு இடியாப்பம் பிழியும் காட்சியுடன் காணொளி தொடங்குகிறது.

பின்னர் மலாய் மொழியில் ‘புட்டு மயாம்’ என்று அழைக்கப்படும் இடியாப்பம், வெவ்வேறு சமூகத்தினரையும் பண்பாடுகளையும் எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பது குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

இடியாப்பத்தைப் பல்வேறு வகைகளில் உண்ணலாம் என்ற அதிபர் தர்மன், சொதி, தேங்காய்த் துவையல், இறைச்சிக் கறியுடன் சேர்த்து உண்பதே தமக்குப் பிடிக்கும் என்றார். இடியாப்பத்தைக் கையால் சாப்பிடுவதே சுவை மிகுந்தது என்று கூறியதுடன் அவ்வாறே கையால் சாப்பிட்டபடியே உரையாடினார்.

தமக்கு முருங்கைக்காய் சாம்பாருடன் இடியாப்பம் சாப்பிடுவது பிடிக்கும் என்று திருமதி தர்மன் குறிப்பிட்டார். திரு தாஸ் டிடி, தேங்காய்ப்பூ, சிவப்புச் சர்க்கரையுடனும் பேராசிரியர் சைரின் செலமாட் தேங்காய்ப்பூ, கருப்பட்டியுடனும் இடியாப்பம் உண்டனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய உணவு அனைத்து இனத்தவராலும் விரும்பிச் சுவைக்கப்படுவதை அந்தக் காணொளி எடுத்துரைத்தது.

உணவுப் பண்பாடு சிங்கப்பூரின் பல்வகைச் சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்ற கருத்துடன் அதிபர் தர்மன் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்