தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசா மரபுடைமைத் தளங்களின் அழகை ரசித்த அதிபர் தர்மன்

2 mins read
156fdcaf-02b1-4792-84a5-b7dc039f9c2b
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கோனார்க் சூரியக் கோவிலில் தம் துணைவியாருடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

புவனேஸ்வர்: யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளங்களில் ஒன்றான ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் சூரியக் கோவிலுக்கும் மரபுவாய்ந்த சிற்றூரான ரகுராஜ்பூருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சனிக்கிழமை (ஜனவரி 18) சென்றிருந்தார்.

இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டச்சத்திரா ஓவியங்களுக்கும் பனையோலை எழுத்து ஓவியங்களுக்கும் பெயர்பெற்ற இடம் ரகுராஜ்பூர்.

அவ்வூரை நோக்கிய குறுகிய சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்து, குலவையொலியுடன் அதிபர் தர்மனை வரவேற்றனர். அதிபரின் வாகனப் பேரணியைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

ரகுராஜ்பூரின் பாரம்பரிய ஒடிசி நடனமான கொடிபுவா படைப்பைப் பார்த்துப் பரவசமடைந்தார் திரு தர்மன். பெண் வேடமிட்டு இளம் ஆண்கள் ஆடும் நடனமே பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த கொடிபுவா.

கைவினைக் கலைஞர்கள் அதிகம் வசிக்கும் அச்சிற்றூரானது வண்ண வண்ணக் கலைப்பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஊர் மத்தியில், சாலையின் நடுவில் இருந்த கோவிலைச் சுற்றி சிவப்புக் கம்பளங்கள் போர்த்தப்பட்டிருந்தன.

தம் துணைவியார் ஜேன் இத்தோகியுடன் சேர்ந்து பட்டச்சத்திரா கலை பற்றியும் அதன் செய்முறை, வரலாறு, தனித்துவம் பற்றியும் கேட்டறிந்த அதிபர், சில கலைப்படைப்புகளையும் வாங்கினார்

போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிம் பியாவ் சுவான், ஜோன் பெரேரா, டாக்டர் வான் ரிசால் ஆகியோர் அதிபருடன் சேர்ந்து ‘வாழும் அரும்பொருளகம்’ என்று வருணிக்கப்படும் ரகுராஜ்பூரைப் பார்வையிட்டனர். அவ்வூரில் ஒவ்வோர் இல்லமும் கலையம்சம் ததும்பி, கண்காட்சிபோல இருந்தது.

ரகுராஜ்பூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஆயுஷ் மொகபத்ரா, 16, பூரி ஜெகன்னாத் கோவிலைப் பின்னணியில் கொண்ட ஓவியத்தை அதிபருக்குப் பரிசளித்தார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி, 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோனார்க் சூரியக் கோவிலைச் சென்றடைந்தார் திரு தர்மன்.

பிரமிக்க வைக்கும் நுணுக்கமான வடிவங்களால் செதுக்கப்பட்ட கோவில் அதிபரின் வருகைக்காக நான்கு மணி நேரம் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது.

ஒடிசா அரசாங்க அதிகாரிகளும் இந்திய அகழாய்வு அமைப்பின் அதிகாரிகளும் அதிபரை வரவேற்று கோவிலைச் சுற்றிக்காட்டினர்.

இந்தியாவிற்கான தமது அரசுமுறைப் பயணத்தின் அங்கமாக இரண்டு நாள்கள் ஒடிசாவில் இருந்தார் அதிபர்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை புவனேஸ்வரில் அமைந்துள்ள கலா பூமி ஒடிசா கைவினை அரும்பொருளகத்தில் அதிபருக்கு இரவு விருந்தளித்தார் அம்மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்படி. திறந்தவெளியில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில், நேரடி பாரம்பரிய இசைக் கச்சேரியைக் கேட்டபடி, சுவையான ஒடிசாவின் பாரம்பரிய உணவை அதிபரும் பேராளர்களும் உண்டு மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்