முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75, என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியன், 75, ஆகிய மூவருக்கும் அதிபர் தேர்தல் குழு தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தொழில் முனைவர் ஜார்ஜ் கோ, 63, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதி பெறவில்லை.
இவ்விவரங்களைத் தேர்தல் துறை வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதிபர் தேர்தல் குழுவிற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திரு தர்மன், திரு இங், திரு டான் ஆகிய மூவரும் நேர்மை, நற்பண்பு, நன்மதிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.
பொதுச் சேவை ஆணையத் தலைவர் லீ ஸு யாங் தலைமையிலான அறுவர் அடங்கிய அதிபர் தேர்தல் குழுவில், கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
19(3)(சி) சட்டப்பிரிவின்கீழ், பொதுச் சேவைத் துறையில் பணியாற்றியதன் அடிப்படையில் திரு இங் விண்ணப்பித்து இருந்தார்.
ஆறாம் அட்டவணை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குச் செயல்பட்ட வகையில், திரு இங் அதிக அனுபவமும் திறமையும் கொண்டுள்ளதாக அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.
முக்கிய ஆணைபெற்ற கழகங்களும் அரசாங்க நிறுவனங்களும் ஆறாம் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
19(3)(ஏ) சட்டப்பிரிவின்கீழ், மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அமைச்சராகப் பணியாற்றியுள்ளதால் திரு தர்மனின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குழு தெரிவித்தது.
திரு டான், 19(3)(பி) சட்டப்பிரிவின்கீழ், தனியார் துறையில் உயர்பொறுப்பில் இருந்த வகையில் விண்ணப்பித்து இருந்தார்
குறைந்தது $500 மில்லியன் பங்குதாரர் முதலீட்டைக் கொண்டுள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வகையில், திரு இங் அதிக அனுபவமும் திறமையும் கொண்டுள்ளதாக அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.
இம்மாதம் 22ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தினம். அதற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தல் குழு தனது முடிவுகளை அறிவித்துவிட்டது.
தகுதிச் சான்றிதழ் பெற்ற மூவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில், அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் இடம்பெறும்.
வேட்புமனுத் தாக்கல் நாளன்று அவர்கள் தேவையான ஆவணங்களுடன் மக்கள் கழகத் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டும்.
தகுதிச் சான்றிதழ் கேட்டு அறுவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என்பதையும் ஏற்றுக்கொள்ளப்படாமைக்கு உரிய காரணங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டதாக தேர்தல் துறை கூறியது.
ஏற்றுக்கொள்ளப்படாத விண்ணப்பதாரர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்படாது என்றும் அது குறிப்பிட்டது.
இதனிடையே, ஐந்து சீனச் சமூகச் சான்றிதழ்களும் ஓர் இந்திய அல்லது சிறுபான்மை இனச் சமூகச் சான்றிதழும் வழங்கப்பட்டதாகத் தேர்தல் துறை இன்னோர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
சமூகச் சான்றிதழ் கோரி வந்த மேலும் பத்து விண்ணப்பங்களைத் தேர்தல் துறை நிராகரித்தது.


