சிங்கப்பூரில் அறுபது வயதை எட்டிய அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடையே மறதிநோய் ஏற்படுவது குறைந்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் பத்துப் பேரில் ஒருவருக்கு மறதிநோய் இருந்தது.
இது, தற்போது 11 முதியோரில் ஒருவராகக் குறைந்துள்ளது என்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தப் பிரிவினரிடையே அதிகரித்த வேலை வாய்ப்பு, உயர்கல்வி, குறைந்த பக்கவாதப் பாதிப்பு ஆகியவை முதுமைக்கால மறதிநோய் பாதிப்பு குறைய முக்கியப் பங்களித்ததாக ஆய்வை மேற்கொண்ட மனநலக் கழகம் தெரிவித்தது.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் முதியோரில் அதிகமானோர் வேலையில் சேர்க்கப்பட்டதைக் காண முடிந்தது. அது மட்டுமல்லாமல் மறதிநோய்க்கு ஆபத்தான காரணமாக விளங்கும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதும் குறைந்தது,” என்று மனநலக் கழகத்தின் மருத்துவக் குழுவின் (ஆய்வு) உதவித் தலைவரும் ஆய்வின் இணை ஆய்வாளருமான டாக்டர் மைதிலி சுப்ரமணியம் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய 2,010 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 2022 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏறக்குறைய 1,800 சுகாதாரப் பராமரிப்பாளர்களும் பங்கேற்றனர்.
நேருக்கு நேர் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் நீடித்தன.
இந்நிலையில், நாட்டின் மக்கள்தொகை வெகுவேகமாக மூப்படைவதால் மறதிநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பராமரிப்பாளர்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு துறைக்கும் பெருஞ்சவாலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதன்படி, மறதிநோயால் பாதிக்கப்பட்ட முதியோரின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டின் 51,934லிருந்து 2023ஆம் ஆண்டில் 73,918ஆகக் கூடியது.
முதுமைக்கால மறதிநோய் முன்னரே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவது நற்செய்தி. கடந்த ஆய்விலிருந்து மறதிநோய்க்கான சிகிச்சை இடைவெளி சுமார் 19 விழுக்காட்டுப் புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
மறதிநோய்க்கான காரணங்கள் உடைய 51.5 விழுக்காட்டு முதியோரிடம் மறதிநோய் கண்டறியப்படவில்லை, சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, 2013ஆம் ஆண்டில் 70.6 விழுக்காடாக இருந்தது.
வேலை செய்யும் முதியோருடன் ஒப்பிடும்போது ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு முறையே 11 மடங்கு மற்றும் ஒன்பது மடங்கு மறதிநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பது சுவாரசியமான தகவலாகும்.