தங்கம் விலை ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதால் அதனை வாங்க சிங்கப்பூரர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.
அவர்களின் ஆர்வம், தங்கத்தின் விற்பனை மீட்சி கண்டதை உணர்த்துகிறது.
சிங்கப்பூரில் தங்கத்தை நேரடியாக பொதுமக்களுக்கு விற்கும் ஒரே வங்கியான யுஓபி வங்கியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) பலரும் வரிசையில் காத்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்தது.
அவ்வாறு நின்றிருந்தவர்களில் ஒருவரான திருவாட்டி இங் பெங் சூ, காலை 9.30 மணிக்கு வங்கிக்கு வந்து தங்கம் வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கியதாகவும் ஆறு மணி நேரத்திற்கும் மேல் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
யுஓபி வங்கியில் தங்கத்தை வாங்க முன்பதிவு செய்யாதவர்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க நேர்ந்தது.
வங்கியின் இருப்பில் இருந்த ‘MKS PAMP SA’ முத்திரை பதிக்கப்பட்ட தங்கம் திங்கட்கிழமை வேகமாக விற்றுத் தீர்ந்ததாக வங்கி அறிவித்தது. காலம் தாழ்த்தி வந்தவர்களுக்கு அந்த சொக்கத்தங்கம் கிடைக்கவில்லை.
கடந்த பல மாதங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஜனவரி 29ஆம் தேதி உச்சத்தைத் தொட்ட பின் சரியத் தொடங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் ஐந்தில் ஒரு பங்கு விலை வீழ்ச்சி கண்டது. திங்கட்கிழமையும் வீழ்ச்சி தொடர்ந்தது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விற்பனை நிலவரம் குறித்த தகவல்களைத் தமிழ் முரசு திரட்டியது.
தொடர்புடைய செய்திகள்
விலை குறைந்ததையடுத்து, வாடிக்கையாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் கூறினார் ‘ஜீஆர்கே கோல்ட் பேலஸ்’ நிறுவன ஊழியர் ரமேஷ் பாபு. பழைய நகைகளை மாற்றி புதிதாக்குவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், திருமண நாள் வருவதால், இப்போதே வாங்கி வைக்கும்படி வாடிக்கையாளர்களிடம் கூறுவதாகச் சொன்னார்.
மேலும், “தொடர்ந்து விலை குறைந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். அது நல்லது,” என்றார் அந்த ஊழியர்.
அக்ஷயா ஜுவல்லர்ஸின் ஊழியரான பாக்யராஜ், “விலை தொடர்ந்து குறைந்தால், அதிக விலை கொடுத்து கடைகள் வாங்கிய நகைகளைக் குறைவான விலையில் விற்க நேரிடும். அது வர்த்தகர்களைப் பாதிக்கும்,” என்று கருத்துரைத்தார்.
விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறி வருவதால் வாடிக்கையாளர்களிடம் குழப்பம் காணப்படுவதாக அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ் மேலாளர் மங்கலேஸ்வரன் கூறினார்.
தங்கள் கடையில் முதலீடுகளுக்கும் பயன்பாட்டுக்குமாக வாங்குவோர், ‘தொடர்ந்து குறையுமா’ என்ற கேள்வியுடனே வருவதாக அவர் சொன்னார். விலை குறையும்போது தங்கத்தை வாங்கி வைத்துவிடவேண்டும் எனும் எண்ணத்தில் சிலர் வருவதாகவும் அவர் சொன்னார்.
கூடுதல் செய்தி: லாவண்யா வீரராகவன்

