புதிய விதிமுறைகளால் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விலை ஏற்றமடையலாம்

சாதனங்களின் விலை ஏறத்தாழ 15 விழுக்காடு அதிகரிக்கும்

புதிய விதிமுறைகளால் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விலை ஏற்றமடையலாம்

2 mins read
பதிவுக்கானக் கட்டணங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலிக்கிறது
72a7cdb9-9fa8-4439-8a3b-c59ddfd99ee8
முதியோர்கள் பலர் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Watch on YouTube

தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விற்பனைக்கான விதிமுறைகள் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

உடல் நலமுள்ளோர் அதுபோன்ற சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான மசோதா இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய விதிகளின்படி, அவை ஒருவரிடம் விற்கப்படுமுன், முன்பதிவு செய்யப்பட்டு, அவற்றில் அடையாள முத்திரைகள் (Tag) பொருத்தப்படவேண்டும். மேலும் அவற்றை வாங்குவோருக்கு மருத்துவச் சான்றிதழ்கள் அல்லது சான்று தேவையில்லை என்பதற்கான அதிகாரபூர்வ விலக்குகள் இருக்கவேண்டும். விற்பனைப் பரிவர்த்தனைக்கான உரிமைப் பத்திரம் சாதனம் கைமாறும் இடத்தில் பூர்த்திசெய்யப்படவேண்டும்.

இவையனைத்தின் காரணமாக தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் விற்பனைவிலை ஏறத்தாழ 15 விழுக்காடு அதிகரிக்கும் என்று அதன் வர்த்தகர்கள் கருத்துரைத்துள்ளனர். தொழில்நுட்பத்தை அதிகம் அறிந்திராத முதியோர்களுக்கு புதிய பதிவுக்கும் உரிமை மாற்றத்துக்குமான விதிமுறைகளைப் புரிந்துகொள்வது சவாலாக இருக்கும் எனவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ஓர் இருக்கையுடன் இரு கைப்பிடிகளும் மூன்று அல்லது நான்கு சக்கரங்களைக் கொண்டவை தனிநபர் நடமாட்டச் சாதனங்கள். சோதனைக்கும் முன்பதிவுகளுக்கும் அச்சாதனங்களை அனுப்பிவைக்க தளவாடச் செலவுகள் அதிகரிக்கும் என்று டிஎன்ஆர் வீல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் மோர்கன் சிங் தெரிவித்தார்.

“நேரம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கலாம். பெட்டிகளில் இறக்குமதியாகும் இவ்வகை சாதனங்களை விற்கும்போது மட்டும்தான் திறப்போம். எனவே, ஒவ்வொரு முறையும் அவற்றை தனித்தனியாக சோதனை நிலையத்துக்கு அனுப்புவதா அல்லது மொத்தமாக அனுப்புவதா என்பதை முடிவுசெய்ய வேண்டும்,” என்றார் திரு சிங்.

“ஒன்றன்மீது ஒன்றாக வைத்து லாரிகளிலோ வேன்களிலோ சாதனங்களை அடுக்க முடியாது. அதனால் கூடுதல் மனிதவளத்தையும், வாகனங்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவைபோன்ற அதிக செலவுகள் சாதனங்களில் விலை ஏற்றத்தை ஏற்படுத்தும்,” என்று விளக்கினார் திரு சிங்.

திரு சிங்கின் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 100 தனிநபர் நடமாட்டச் சாதனங்களை இறக்குமதி செய்கிறது. ஒவ்வொன்றும் $1,000 முதல் $2,000 வரை விற்பனையாகின்றன.

பதிவுக்கானக் கட்டணங்களைப் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் தகவல் வெளியிடப்படும் எனவும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்