செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் இதர வழிபாட்டுத் தலங்களில் சுற்றுக்காவல் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
புக்கிட் தீமாவில் உள்ள தேவாலயத்தில் நவம்பர் 9ஆம் தேதி பாதிரியார் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சமயரீதியாக அல்லது பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இருந்தாலும் பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உயர்மட்ட சுற்றுக்காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், தாக்குதலுக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள இதர சமயத் தலைவர்கள் உடனே ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்திருப்பது மனநிறைவைத் தருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“சில வேளைகளில் சமயரீதியான வன்முறைச் சம்பவங்கள் சமய சமூகங்களுக்கு இடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பதை மற்ற நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் சிங்கப்பூரில் இந்தச் சம்பவம் உட்பட சிரமமான காலங்களில் நமது வெவ்வேறு சமயங்களும் அவற்றின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக தோளோடு தோள் நின்றிருப்பது நம்முடைய அதிர்ஷ்டம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட பிற தாக்குதல்கள் நடந்தால் சிங்கப்பூர் சிறந்த முறையில் சமாளிக்க முடியும் என்பதை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்திய ஆடவர் பஸ்நாயக கீத் ஸ்பென்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பஸ்நாயக கீத் ஸ்பென்சர் என அடையாளம் காணப்பட்ட 37 வயதான சிங்கப்பூரர், செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாரிஷ் பாதிரியார் மாலை ஆராதனை நடத்திக்கொண்டிருந்தபோது, தவத்திரு கிறிஸ்டஃபர் லீயைக் கத்தியால் குத்தினார்.
செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ, மடக்கும் கத்தியால் தாக்கப்பட்டார் என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) அதிகாலை காவல்துறை தெரிவித்தது.
தாக்குதல்காரரிடம் மொத்தம் ஐந்து ஆயுதங்கள் இருந்ததாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் ஜூரோங் காவல்துறைப் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர். அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே மோசமான காயம் ஏற்படுத்தியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 37 வயது சிங்கள ஆடவர் மீது திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
தாக்குதல்காரரை மனநலக் கழகத்தில் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறை நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தாக்குதல்காரர், தான் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர் என்று முன்னதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். ஆடவர் தனியாகச் செயல்பட்டதுபோல் முதற்கட்ட விசாரணையில் தெரிவதாக காவல்துறை குறிப்பிட்டது.
தாக்குதல்காரர், போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்களைப் புரிந்தவர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் சனிக்கிழமை (நவம்பர் 9) மாலை கூட்டுப் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது 6.15லிருந்து 6.20 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பாதிரியார் தாக்கப்பட்டார் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார். கூட்டுப் பிரார்த்தனை மாலை சுமார் 5.30 மணிக்குத் தொடங்கியது.
கூட்டுப் பிரார்த்தனையின்போது தாக்குதல்காரர் பக்தர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட அந்நபர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மாலை 6.30 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது. கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டோர் தாக்குதல்காரரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்ததாகவும் அதற்குப் பிறகு தாங்கள் அவரைக் கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
பத்து நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறையினர் கத்தியால் தாக்கியவரை கைது செய்தது.
தாக்குதலுக்குப் பிறகு அங்கு உதவியவர்களைப் போலவே, அவசரகாலத்தில் விழிப்புடன் செயல்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு முதலுதவி, தானியங்கி இதயத் துடிப்பு மீட்புச் சாதனம் போன்ற உயிர்காக்கும் திறன்களுடன் சமுதாய மீள்திறனுக்கு சிங்கப்பூரர்கள் முக்கிய பங்காற்றலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.
“இத்தகைய திறன்கள் வாழ்வா அல்லது சாவா என்ற கட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேவாலய சம்பவத்தைப் போலவே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு இத்தகைய உதவிகள் முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.