புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் சனிக்கிழமை (நவம்பர் 9) மாலை பிரார்த்தனை நடத்திக்கொண்டு இருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் காயமுற்ற அந்த 57 வயது பாதிரியாருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தாக்குதல் நடத்தியவர் 37 வயது சிங்கப்பூர் சிங்களர் எனத் தெரிவித்தார். தாம் ஒரு கிறிஸ்தவர் என அந்த ஆடவர் முன்னதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் அறிவித்திருந்ததாகவும் அமைச்சர் சண்முகம் கூறினார்.
“தாக்குதல்காரரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. விசாரணை தொடர்கிறது,” என்ற அமைச்சர் சண்முகம், பாதிரியாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.
காவல்துறை இரவு 9.30 மணியளவில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த ஆடவர் தனியாகச் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் இது பயங்கரவாதச் செயல் என இப்போதைக்குச் சந்தேகிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரார்த்தனையில் கலந்துகொண்டோர் அந்த ஆடவரிடமிருந்து ஆயுதத்தைக் கைப்பற்றியதாகவும் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. கடும் காயம் விளைவித்தது, போதைப்பொருள் போன்று கடந்தகாலத்தில் அவர் குற்றங்கள் புரிந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்வதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் இதுகுறித்து ஊகத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியது.
சிங்கப்பூரில் வன்முறைக்கு இடமில்லை எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் அமைதியையும் ஆறுதலையும் நாடும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பையும் புனிதத்தன்மையையும் நாம் நிலைநாட்ட வேண்டும்.
“இச்சம்பவத்தில் தாக்குதல்காரர் மேலும் தீங்கு விளைவிப்பதற்கு முன், பிரார்த்தனையில் பங்கேற்ற சிலர் அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து ஆயுதத்தைப் பிடுங்கிவிட்டனர்.
“நடந்தது பற்றி திருச்சபை மக்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திலிருந்து அவர்கள் மீளுவர் என நான் நம்புகிறேன்,” என்றார்.
சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கப் பேராயம் சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், இத்தாக்குதல் குறித்து தான் கவலையடைந்ததாகக் கூறியது.
எண் 620 அப்பர் புக்கிட் தீமா சாலையில் மாலை 6.30 மணியளவில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அருள்திரு கிறிஸ்டஃபர் லீ எனும் அந்தப் பாதிரியார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இரவு 7.45 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு தேவாலயத்துக்குச் சென்றபோது, அங்கு வெளியே ஐந்து காவல்துறை கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தேவாலய வளாகத்தினுள் ஏறக்குறைய 10 காவல்துறை அதிகாரிகள் காணப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அமைச்சர் டோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“சந்தேக நபரிடமிருந்து ஆயுதம் பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிகிறேன். காயமுற்ற பாதிரியாருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
“சிங்கப்பூரில் எந்தக் காரணத்துக்காகவும் எந்த விதத்திலும் இதுபோன்ற வன்முறைக்கு நிச்சயமாக இடமில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அதை முறையாகக் கையாள்வர்,” என்றார் அமைச்சர் டோங்.
சிங்கப்பூரில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத் தலைவரான பேராயர் வில்லியம் கோ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்தத் தாக்குதல் குறித்து தாம் “அதிர்ச்சியும் மிகுந்த சோகமும்” அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலை நேரில் கண்ட சிறார்கள் உட்பட அனைவருக்கும் மனோரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்பை நினைத்து தாம் மிகுந்த கவலையுறுவதாக அவர் சொன்னார்.