பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கட்டங்கட்டமாகக் குறைக்கப்படவுள்ளது.
இவ்வாண்டு நடைபெறவுள்ள தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கை நடவடிக்கையிலிருந்து எண்ணிக்கை குறைக்கப்படும்.
“இவ்வாறு செய்யும்போது பள்ளிகளை ஒன்றிணைக்கவோ பள்ளிகளை இடம் மாற்றவோ தேவை இருக்காது. மாணவர்களுக்காக சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் சமமான எண்ணிக்கையில் தொடக்கப்பள்ளிகளை வைத்திருக்க முடியும்,” என்று கல்வி அமைச்சு புதன்கிழமை (ஏப்ரல் 29) அறிக்கை மூலம் தெரிவித்தது.
சமூக நிலவரத்தில் காணப்படும் மாற்றங்கள் (changing demographics), புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட சில பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைத் தாங்கள் அடிக்கடி மாற்றி வருவதாகக் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
“பிறந்தநாள்களின்படி பிரிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை (birth cohort sizes), வருங்காலத்தில் கட்டப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவுக்கு இருக்கும் தேவையை கல்வி அமைச்சு தொடர்ந்து பரிசீலிக்கும். தேசிய அளவிலும் அந்தந்த வட்டார ரீதியாகவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பள்ளிகளில் இடம் இருப்பதை நாங்கள் உறுதிசெய்வோம்,” என்றும் அமைச்சு கூறியது.
2027 பள்ளி ஆண்டுக்கான பதிவு நடவடிக்கை வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் அது தெரிவித்தது.
பதிவு நடவடிக்கை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் தங்கள் பிள்ளைகள் எந்தப் பள்ளிக்குத் தகுதிபெறுகின்றனர் என்பதையும் பெற்றோர் https://www.moe.gov.sg/primary/p1-registration/how-to-register என்ற இணைய முகவரி மூலம் தெரிந்துகொள்ளலாம். இது, தொடக்கநிலை ஒன்றில் மாணவர்களைச் சேர்க்கப் பதிவுசெய்வதற்கான தளமாகும்.
சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு தளத்துக்குள் செல்லவேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பெற்றோர் மட்டும் அதற்குள் சென்று பதிவுசெய்தால் போதும். பதிவு நடவடிக்கை இடம்பெறும்போது உதவி தேவைப்படுவோர் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளியை மின்னஞ்சல் வழியாகவோ காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 4.30 மணிக்குள் தொலைபேசி எண்ணை அழைத்தோ தொடர்புகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
பதிவு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு என்னென்ன தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன, அவற்றில் எத்தனை இடங்கள் இருக்கின்றன ஆகிய விவரங்களைப் பெற்றோர் தெரிந்துகொள்ளலாம். பதிவு நடவடிக்கையின்போது ஒவ்வொரு கட்டத்திலும் விண்ணப்பதாரர் எண்ணிக்கை, காலியாக இருக்கும் இடங்கள் ஆகிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
“பிள்ளைகளைச் சேர்க்கப் பல்வேறு பள்ளிகளைக் கருத்தில்கொள்ளுமாறும் அந்தந்தப் பள்ளியின் திட்டங்கள் எவ்வாறு பிள்ளைகளின் கற்றல் தேவைகள், விருப்பங்கள், ஆற்றல் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இருக்கின்றன ஆகியவற்றை ஆராயுமாறும் பெற்றோரை ஊக்குவிக்கிறோம்,” என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

