இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய 40,894 மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிஎஸ்எல்இ எழுதிய மாணவர்கள் புதன்கிழமை (நவம்பர் 20) காலை 11 மணியிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெறத் தொடங்கினர்.
தகுதி பெறாத மாணவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதலாம் அல்லது, தொடக்கப்பள்ளியின் பரிந்துரைக்கு ஏற்ப நடைமுறைக் கற்றல் அணுகுமுறை கொண்ட அசம்ப்ஷன் பாத்வே பள்ளி, நார்த்லைட் பள்ளி உள்ளிட்டவற்றின் தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களில் சேரலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு வாரியமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் மாணவர்கள் பெரும் அடைவுநிலையைப் பொறுத்து அவர்களது உயர்நிலைப் பாடங்களைத் தேர்வு செய்வர். இறுதித்தேர்வின் ஸ்டாண்டர்ட் பாடங்களில் ஐந்து புள்ளிகளுக்கும் கீழ் எடுத்தால், உயர்நிலையில் ஜி2 அல்லது ஜி3 (G2/G3) பாடங்களைத் தெரிவு செய்ய முடியும். அடுத்தடுத்த நிலையில் மாணவர்கள் பெற்றுள்ள புள்ளிகளை பொறுத்து அவர்களுக்கான உயர்நிலைப் பாடங்கள் தெரிவு செய்ய இயலும்.
இவ்வாண்டில் ஆறாம் வகுப்பைப் பொறுத்த மட்டில் 65 விழுக்காடு நியமனக் குழு 1 மற்றும் 2 (Posting Groups 1 and 2) மாணவர்கள் குறைந்தது ஒரு உயர் தேவையுள்ள பாடத்தினை (more demanding level) எடுத்துப் படிக்க முடியும்.
தகுதிபெற்ற மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பப் படிவம் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து வழங்கப்படும்.
மாணவர்கள் அவர்களது விருப்பத்தை நவம்பர் 20 காலை 11.30 மணி முதல் நவம்பர் 26 மாலை 3 மணி வரை கொடுக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் இணையப் பக்கத்தில் பதிவிடலாம்.
சிறந்த தேர்ச்சி பெற்ற தமிழ்க் கதை சொல்லி அக்ருத்தா
கடந்த சில மாதங்களாக நூலகத்தில் பிஎஸ்எல்இ தேர்வுக்கு பயிற்சி எடுத்த மாணவி அக்ருத்தா உயர் தமிழில் தகுதி பெற்றதுடன் 10 புள்ளிகளுடன் ஒட்டுமொத்தத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணமே பயமும் அழுத்தமும் தந்ததை நினைவுகூர்ந்தார் அக்ருத்தா.
இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவியான வாங்கல் பிரதீப் அக்ருத்தா, 12, இயல்பிலேயே நன்கு படிக்கும் மாணவி. அவரது பயத்தினைப் புரிந்துகொண்ட அவரது பெற்றோர் பிரதீப், 42 - பத்ம பிரியா, 38 அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.
பெற்றோர் இருவருமே பொறியியலாளர்கள் என்றாலும், மருத்துவம் படிப்பது இவரது கனவாக இருக்கிறது. “நல்ல மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி. தொடர்ந்து நன்கு படித்து என் பெற்றோரைப் பெருமைப்படுத்துவேன்” என்று நம்பிக்கையுடன் சொன்னார் அக்ருத்தா.
கல்வியுடன், தரைப்பந்து, பரதநாட்டியம், தமிழ் கதை சொல்லல் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர், “மொழியும் கலையும் எனக்கு விருப்பமானவை. எதிர் காலத்தில் என்ன பணி செய்தாலும், தமிழ் மொழியில் கதை சொல்வதை நிறுத்தமாட்டேன் என்றார். பரதநாட்டிய தேர்ச்சி பெற்று பகுதி நேர நாட்டிய ஆசிரியராகவும் பணியாற்ற விழைகிறார் அக்ருத்தா.