பிரதமர் லாரன்ஸ் வோங், 2025 நிதியாண்டுக்கான உபரி $15.1 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1.9 விழுக்காடு.
அதற்கு சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டதே காரணம் என்ற திரு வோங், நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வருமான வரியும் உபரிக்கான மற்றொரு காரணம் என்றார்.
கடந்த 2024 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 4% நிறுவன வருமான வரியால் ஈட்டப்பட்ட வருவாய். அது கடந்த நிதியாண்டுகளைவிட அதிகம்.
அதேபோல 2025 நிதியாண்டிலும் நிறுவனங்களிடமிருந்து அதிகமான வருமான வரி வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் கார்கள், சொத்துகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்ததால் வாகன உச்ச வரம்பு சந்தாக்கள், முத்திரை வரி ஆகியவை தொடர்பில் பெறப்பட்ட வருவாயும் அதிகம்.
வரும் 2026 நிதியாண்டுக்கான உபரி சற்று குறைவாக இருக்கும் என்ற பிரதமர் வோங், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது ஒரு விழுக்காடு அதாவது $8.5 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
2027ஆம் நிதியாண்டு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திரு வோங், சிங்கப்பூரில் செயல்படும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதம் 15 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும் என்றார்.
அதேவேளை, பல்வேறு துறைகளில் செலவினங்களும் அதிகரிக்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்த கூடுதல் முதலீடு செய்யவேண்டும். சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திறன்களை வலுப்படுத்தவேண்டும்.
சுகாதாரப் பராமரிப்பு, நீண்ட கால சவால்கள் ஆகியவற்றுக்கும் நிதியை ஒதுக்கியிருப்பதாகச் சொன்ன பிரதமர் வோங், சிங்கப்பூரின் வருவாயும் செலவினங்களும் ஒருசேர அதிகரிக்கவே செய்யும் என்றார்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் கொள்கைகளிலும் திட்டங்களிலும் அர்த்தமுள்ள, பொறுப்புமிக்க வகையில் அரசாங்கத்தால் முதலீடு செய்ய முடிகிறது என்று பிரதமர் வோங் சுட்டினார்.

