இறக்குமதி அனுமதிக்கான தேவைகள், சிக்கலான சுங்க வழிமுறைகள் போன்ற வரியைத் தாண்டிய வர்த்தகத் தடைகள் ஆசியான் நாடுகளுக்கிடையில் இன்னும் செயல்பாட்டில் இருக்கின்றன.
இந்த வட்டாரத்திற்குள் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க அவை தடையாக இருக்கின்றன என்று தென்கிழக்காசிய நாட்டுத் தலைவர்களிடம் எடுத்துரைத்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
ஆசியான் தடையற்ற வர்த்தகத் தளம் ஓரளவு வரியில்லாமல் இருப்பதை மேலும் மேம்படுத்தி முற்றிலும் வரியே இல்லாமல் செய்ய முனையவேண்டும் என்றும் திரு வோங் வலியுறுத்தினார்.
அத்துடன் இணக்கம் காணப்படும் உடன்பாடுகளை காலதாமதம் இல்லாமல் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உடன்பாடு எட்டப்பட்ட 24 பொருளியல் ஒப்பந்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதைச் சுட்டிக்காட்டிய திரு வோங், ஆசியான் உச்சநிலை மாநாட்டின் அங்கமாக நடைபெற்ற ஓய்வுத்தளச் சந்திப்பில் பேசினார்.
பொருள் வணிகத்தைத் தாண்டி சேவைகள் சார்ந்த வணிகத்திலும் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர். மேலும், ஆசியான் வட்டாரம் முழுவதையும் முதலீடுகளுக்கு ஏற்ற போட்டித்தன்மைமிக்க வட்டாரமாக்க இன்னும் அதிகமான முயற்சியை எடுக்கவும் தமது சகாக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
வர்த்தகம் குறித்தும் மியன்மார் விவகாரம் குறித்தும் பிரதமர் ஓய்வுத்தளச் சந்திப்பில் பேசினார்.
நீண்டகால அரசியல் தீர்வுக்கான முதல் படியாக விரிவாக்கம் கண்ட சண்டைநிறுத்தத்திற்கு தமது சகாக்களுடன் தாமும் ஆதரவளிப்பதாக பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேம்பாடுகள் மிகவும் தாமதமாகவே நடப்பதாகக் கூறிய அவர், பிரச்சினைகள் சிக்கலானது என்றும் முன்னேற்றத்திற்கான வழிகளை ஆராய்வது மிகவும் கடினம் என்றும் அறிவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், மியன்மார் குறித்து தலைவர்கள் ஏற்கெனவே எடுத்த முடிவை நிலைநாட்டவேண்டும் என்றும் ஐந்து அம்ச உடன்பாட்டிலிருந்து விலகக் கூடாது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
அதன்படி, உச்சநிலை மாநாடுகளிலும் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பிலும் அரசியல் சாரா பிரதிநிதிகளையே மியன்மார் அனுப்பமுடியும்.
பெரும் சவால்களைக் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாகக் கடந்து வந்த அனுபவத்தை ஆசியான் கொண்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் வோங், ஆசியான் தற்போது சந்திக்கும் கடுமையான நெருக்கடியைக் கடந்துவரும் என்பதில் தாம் நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார்.

