பெரிய நாடுகளுக்கு மத்தியில் நிலவிவரும் பிரச்சினைகளால் புதிய பனிப்போருக்கு இடையே இருப்பதுபோன்ற உணர்வு உள்ளது என்றும் அதனால் ஆசியான் அதன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் ஐக்கியமான அமைப்பாக உருவெடுக்கவேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் அறைகூவல் விடுத்துள்ளார்.
தென்கிழக்காசிய வட்டாரத்திற்கு அப்பால் உள்ள பங்காளிகளுடன் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இணக்கத்தை வலுப்படுத்தவும் புதிய பங்காளித்துவம் குறித்து ஆராயவும் ஆசியான் முனையவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் வோங், திங்கட்கிழமையன்று (மே 26) தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றினார்.
பனிப்போருக்கு இடையே ஆசியான் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு வோங், அன்றைய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் எஸ். ராஜரத்னம் கூறியதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆசியான் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்றால் தனித்தனியே சவாலைச் சந்திக்கவேண்டும் என்றும் அதனால் ஒன்றிணைந்து இருப்பதே சிறந்தது என்றும் அவர் சொன்னார்.
ஏற்கெனவே ஆசியானுடன் இணைந்துள்ள பங்காளித்துவ நாடுகளான சீனா, ஜப்பான், தென்கொரியா, இந்தியா போன்ற நாடுகள் மேலும் அதிகமான வழிகளில் இணைய விரும்பும் என்றும் அவர் சொன்னார்.
கிழக்காசியாவைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற பங்காளிகள் ஆசியானுடன் இன்னும் அணுக்கமாகப் பணியாற்ற விரும்புவர் என்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் திரு வோங் வலியுறுத்தினார். குறிப்பாக, புதிய வளர்ச்சித் துறைகளான மின்னிலக்கப் பொருளியலிலும் பசுமைப் பொருளியலிலும் அவர்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய பங்காளித்துவங்களை ஆராயவேண்டும் என்று வலியுறுத்திய திரு வோங், சில நாடுகள் அதிகாரத்துவப் பங்காளியாவதற்குத் தயாராக இல்லை என்றாலும் இருதரப்புக்கும் நன்மையளிக்கும் குறிப்பிட்ட அம்சங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
உலகில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி, ஆசியா இன்னும் உலக வளர்ச்சியின் மையமாகத் திகழ்கிறது என்றும் அதிகளவில் துடிப்புமிக்கதாகவும் உயிர்ப்புடனும் தென்கிழக்காசிய வட்டாரம் விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஹ்ரேன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்துடனான (ஜிசிசி) இணக்கம் போல நீக்குப்போக்கான பங்காளித்துவத்தை மற்ற தரப்பினருடனும் அமைக்க ஆராயவேண்டும் என்றார் பிரதமர்.
மேலும், பாதுகாப்பான, நிலையான, வளரும் வட்டாரமாக அமைய ஆசியான் தனது தளங்களின் மதிப்பை மேம்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்ட திரு வோங், இணைந்து செயல்படவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முனையவேண்டும் என்றார்.
ஆசியான் அமைத்துள்ள தளங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக முடியாது என்றாலும் கலந்துரையாடலுக்கும் ஒன்றிணைந்து பணியாற்றவும் உதவும் என்று அவர் கூறினார்.
குறிப்பாக, கிழக்காசிய உச்சநிலை மாநாடு இந்த வட்டாரத்தின்மீது ஆர்வம் கொள்ளும் பெரிய நாடுகளை ஒன்றிணைப்பதால் அத்தளத்தைத் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் திரு வோங்.
நாள் முழுவதும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் சந்திப்புகளில் ஈடுபட்டதுடன் இருதரப்பு சந்திப்புகளிலும் பிரதமர் பங்கேற்றார்.
‘ஆசியான் 2045: நமது பகிர்ந்த எதிர்காலம்’ எனும் இணக்கக் குறிப்பும் சந்திப்பில் கையெழுத்தானது. இன்னும் 20 ஆண்டுகளுக்கான ஆசியான் சமூகச் சிந்தனையும் அரசியல்-பாதுகாப்பு, பொருளியல், சமூக-கலாசார, இணைப்பு அம்சங்களில் உத்திபூர்வத் திட்டங்களும் அடங்கிய அந்த இணக்கக் குறிப்பைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆசியான் தலைமைத்துவ நாடான மலேசியாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சந்திப்புகளின் அங்கமாகத் திங்கட்கிழமை இரவு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அஸிஸாவும் தலைவர்களுக்கு விருந்தளித்தனர்.