நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தைக் கொண்டாடுவதுடன் பன்முகக் கலாசாரம், துணிவு, மீள்திறன், வெளிப்படைத்தன்மை போன்ற பொதுவான பண்புநெறிகளைப் பற்றி சிங்கப்பூரர்கள் சிந்தித்துப் பார்க்க எஸ்ஜி60 கொண்டாட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைய வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் நவம்பர் 4ஆம் தேதியன்று தெரிவித்தார்.
“சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து அடுத்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது,” என்று மக்கள் கழக சமூக மன்ற நிர்வாகக் குழுவின் 60 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் ஒன் பொங்கோலில் நடைபெற்ற இரவு விருந்துபசரிப்பில் பிரதமர் வோங் கலந்துகொண்டு பேசினார்.
எஸ்ஜி60 கொண்டாட்டம் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமான மைல்கல் என்றார் பிரதமர் வோங்.
சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் 2025ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“ஆனால், எஸ்ஜி60 வெறும் கொண்டாட்டங்களாக இருந்துவிடக்கூடாது. பொதுவான விழுமியங்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதுடன் நாட்டின் மீதான கடப்பாட்டைப் புதுப்பிக்கும் வாய்ப்பாகவும் அது இருக்க வேண்டும்,” என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணையவும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிக்கவும் அடுத்த ஆண்டு சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்றார் பிரதமர் வோங்.
‘ஒன்றிணைந்து சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவோம்’ என்ற கருப்பொருளுடன் எஸ்ஜி60 கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இக்கருப்பொருளை ஒட்டி அடுத்த ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு வோங்கும் நான்காம் தலைமுறைத் தலைவர்களும் தலைமை தாங்கிய ‘முன்னேறும் சிங்கப்பூர்’ (ஃபார்வர்ட் சிங்கப்பூர்) திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு அந்நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும்.
சிங்கே அணிவகுப்பு, எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடி, சிங்கப்பூர் நீர் உலக நாள், இன, சமய மாதம், எக்ஸ்போ 2025 ஒசாக்காவில் சிங்கப்பூர் பெவிலியன், உலக நீர் விளையாட்டுப் போட்டி போன்றவை நடைபெற இருக்கின்றன.
தேசிய இளையர் மன்றமும் மக்கள் கழகமும் இணைந்து 2025 ஜனவரி மாதத்திலிருந்து ‘எஸ்ஜி60 இளையர்’ நடவடிக்கைகளில் இளையர்களை ஈடு[Ϟ]படுத்தும்.
தனிப்பட்ட கலந்துரையாடல்கள், சாலைக்காட்சிகள், மின்னிலக்க ஈடுபாடுகள் போன்றவற்றின்மூலம் எதிர்காலத்திற்கான தங்களது விருப்பங்களையும் சிங்கப்பூருக்குத் தாங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதனையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
மனநலம், இன, சமய நல்லிணக்கம், நீடித்த நிலைத்தன்மையும் சுற்றுப்புறமும் போன்றவற்றை உள்ளடக்கிய எதிர்கால இளையர் இயக்கமும் உண்டு.
சிங்கப்பூரைத் தோற்றுவித்த தலைமுறையினரைப் பற்றி கதைகளைக் காட்டும் வகையில், சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம் ‘புரோஜெக்ட் சிட்டிசன்ஸ் - தி ஃபர்ஸ்ட் மில்லியன்’ எனும் திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை நடத்தும்.
2028ஆம் ஆண்டில் சிற்பிகள் நினைவகம் திறக்கப்பட்டபின் அது நிரந்தர அம்சமாக இடம்பெறும்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வான்சாகசம், வாண வேடிக்கை உள்ளிட்ட வழக்கமான அங்கங்களுடன் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் இடம்பெறும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டங்களில் மேலும் பல சிங்கப்பூரர்கள் பங்கேற்கும் வகையில், மரினா பே பகுதிக்கும் நகரின் முக்கியப் பகுதி[Ϟ]களுக்கும் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விரிவுபடுத்தப்படும்.
அத்துடன், பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களுடன் வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூர் சமூகங்களும் நிகழ்ச்சிகளை நடத்தும்.

