இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஹரிணி அமரசூரியாவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
நீதித்துறை, கல்வி, சுதாதார, மனிதவள அமைச்சராகவும் டாக்டர் அமரசூரியா பதவி விகிக்கிறார்.
இலங்கையின் பிரதமராக அவரை அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க நவம்பர் 18ஆம் தேதி நியமித்தார்.
இலங்கையின் பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் திரு திசாநாயக்கவின் இடதுசாரிக் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
சமூகவியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்த 54 வயது டாக்டர் அமரசூரியா, பாலினச் சமத்துவத்துக்கும் சிறுபான்மையினத்தவர் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் முதன்முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையை வழிநடத்தவும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும் அந்நாட்டு மக்கள் டாக்டர் அமரசூரியாவுக்கு மிக வலுவான அதிகாரம் கொடுத்திருப்பதைப் பிரதமர் வோங் தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
“உங்களது தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை செழித்தோங்கும், வலுவடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாகவே இருந்து வரும் நெருக்கமான உறவை அவர் சுட்டினார்.
“சிங்கப்பூரும் இலங்கையும் சுகாதாரப் பராமரிப்பு, மின்னிலக்கமயமாதல் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு இலங்கைக்கும் இடையிலான அரசதந்திர உறவு தொடங்கி 2025ஆம் ஆண்டுடன் 55 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளேன்,” என்றார் பிரதமர் வோங்.