மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவையும் பிரதமர் லாரன்ஸ் வோங் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
கோலாலம்பூரில் நடந்துவரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஒட்டிய நிகழ்வுகளுக்கு இடையில் அவர் அந்தச் சந்திப்புகளை நடத்தினார்.
இந்தோனீசிய அதிபராக பிரபோவோ கலந்துகொள்ளும் முதல் உச்சநிலை மாநாட்டிற்கு அவரை வரவேற்பதாக பிரதமர் வோங் மாநாட்டின்போது கூறியிருந்தார்.
உலக, வட்டார மேம்பாடுகள் குறித்தும் நிலைகுலைந்த தற்போதைய காலகட்டத்தில் வலுவான, ஒன்றுபட்ட ஆசியானின் முக்கியத்துவம் குறித்தும் அதிபர் பிரபோவோவுடன் பேசியதாக பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
புவிசார் சவால்களை எதிர்கொள்ள இந்தோனீசியாவுடனான நீண்ட நெடிய உறவு நிலைத்தன்மைக்கான நங்கூரமாகத் திகழ்ந்துள்ளதை பிரதமர் சுட்டினார்.
மலேசியப் பிரதமர் அன்வாருடனான சந்திப்பின்போது, ஆக்கபூர்வமான ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்று நடத்திவந்ததற்காக அவருக்குத் திரு வோங் வாழ்த்து தெரிவித்தார்.
இரு தலைவர்களுடனும் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் இவ்வார இறுதியில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் சிறப்புரை ஆற்ற வரும் பிரதமர் அன்வாரை வரவேற்கக் காத்திருப்பதாகவும் திரு வோங் கூறினார்.

