பசிபிக் பெருங்கடல் வட்டாரம் முழுவதும் தடையற்ற வர்த்தக வட்டாரமாக விளங்குவதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படிப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
ஏபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாடு பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெறுகிறது.
ஏபெக் அமைப்பின் 21 நாடுகளுக்கு இடையிலான ஆசிய-பசிபிக் வட்டாரத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTAAP) குறித்துத் திரு வோங் பேசினார்.
கடந்த பல ஆண்டுகளாக அந்த ஒப்பந்தம் குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.
நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசிய பிரதமர் வோங், வட்டாரப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏபெக் அதன் இலக்குகளை எட்டுவதற்கான பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.
“படிப்படியாக, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் அந்த ஒப்பந்தம் எட்டாக் கனவு அன்று என்பதை நாம் எடுத்துக்காட்டலாம்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
‘சிபிடிபிபி’ எனப்படும் விரிவான, மேம்பட்ட பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம், வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்விரு ஒப்பந்தங்களும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பாதைகள் என்று கூறிய பிரதமர், தரநிலைகளுக்குப் பொருத்தமான எந்த நாடும் அதில் இணைந்துகொள்ளும்படி அது இருக்க வேண்டும் என்றார்.
இத்தகைய நிலை, ஏற்கெனவே இணைந்துள்ள நாடுகள், புதிதாக இணையும் நாடுகள் என இருதரப்புக்கும் நன்மையளிக்கும் என்று திரு வோங் சொன்னார்.
தற்போதைய பங்காளித்துவம் இலக்குக்குப் பொருத்தமானதாக விளங்குவதைத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எடுத்துக்காட்டாக, ஆசியான் கூட்டமைப்பும் அதன் பங்காளித்துவ நாடுகளும் தங்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்துவதை அவர் குறிப்பிட்டார். ஆனால் ‘சிபிடிபிபி’ தலைவர்கள் தங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் பொதுவாக மறுஆய்வு மட்டுமே செய்வதைப் பிரதமர் சுட்டினார்.
பல்லாண்டுகளாக நீடிக்கும் தடையற்ற வர்த்தகம், உலகமயமாதல் ஆகியவற்றை அடுத்து உலகம் இப்போது பின்னோக்கித் திரும்பியுள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார். வர்த்தக நன்மைகள் நியாயமற்ற முறையில் விநியோகிக்கப்படுவதான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளதால் உலகமயமாதலுக்கான ஆதரவு வலுவிழப்பதாக அவர் கூறினார்.