தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா செல்கிறார் பிரதமர் வோங்

4 mins read
7e716319-b087-4752-8186-fd5d27da4d56
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அதன் தொடர்புடைய உச்சநிலைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஆசியான் அமைப்பின் இந்த ஆண்டுத் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் மலேசியா ஏற்பாடு செய்யும் இரண்டு உச்சநிலை மாநாடுகளில் இது முதலாவது. ‘அனைவரையும் உள்ளடக்குவதும் நீடித்த நிலைத்தன்மையும்’ எனும் கருப்பொருளில் மலேசியா இவ்வாண்டு அமைப்பின் நடவடிக்கைகளை வழிநடத்துகிறது.

தென்கிழக்காசிய வட்டாரத்தின் தொலைநோக்குப் பார்வையையும் புவிசார், பொருளியல் சவால்களுக்கிடையில் ஒன்றுபட்ட, மீள்திறன்மிக்க வட்டார அமைப்பாக ஆசியான் உருவெடுப்பதையும் இந்தக் கருப்பொருள் கோட்டிட்டுக்காட்டுகிறது.

மே 3ஆம் தேதி நடந்த தேர்தலுக்குப்பின் பிரதமர் வோங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.

கடந்த ஆண்டு லாவோஸில் நடைபெற்ற ஆசியான் மாநாடு அவர் பிரதமராகக் கலந்துகொண்ட முதல் மாநாடாகும். ஓராண்டுக்குமுன் பிரதமர் பதவியேற்ற திரு வோங், அறிமுகப் பயணத்துக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் புத்ராஜெயாவில் நடைபெற்ற மலேசியப் பிரதமருடனான ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொண்டார். பிரதமர் என்ற முறையில் அவர் மலேசியா செல்வது இது மூன்றாவது முறை.

நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டில் ஆசியான் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியிலும் கடப்பாட்டை உறுதிசெய்ய உள்ளனர்.

தடையற்ற, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய வட்டாரக் கட்டமைப்பாக ஆசியானும் அதன் பங்காளிகளும் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கான வழிகளும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற புதிய வளர்ச்சித் துறைகளின் மூலமாகவும் ஆசியான் நாடுகளின் மத்தியில் வர்த்தகத்தை எளிதாக்குவது மூலமாகவும் ஆசியானின் மீள்திறனை வலுவாக்குவது குறித்துத் தலைவர்கள் பேசவிருக்கின்றனர்.

இவ்வட்டாரத்துக்கு அப்பால் மற்ற பங்காளிகளுடனான ஆசியானின் கலந்துறவாடலை விரிவாக்குவது குறித்துப் பிரதமர் வோங்கும் இதர ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அவரது சகாக்களும் கலந்தாலோசிப்பர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பஹ்ரேன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வட்டார அமைப்பான ஜிசிசி எனும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்துடனும் சீனாவுடனும் தனித்தனி உச்சநிலைச் சந்திப்புகள் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருக்கின்றன.

சீனாவுடனான சந்திப்பில் சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இரு உச்சநிலைச் சந்திப்புகளில் முதலாவதில் உறுப்பு நாடுகள் மட்டுமே கலந்துகொள்வது வழக்கம். இந்த முறை இருவேறு பங்காளித்துவ நாடுகள் முதல் உச்சநிலைச் சந்திப்பில் பங்குகொள்கின்றன.

இதற்கிடையே, தலைவர்களின் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக, பல சந்திப்புகள் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 25வது ஆசியான் பொருளியல் சமூக மன்றச் (ஏஇசிசி) சந்திப்பில் 2026ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான ஆசியான் பொருளியல் சமூக உத்திபூர்வ ஐந்தாண்டுத் திட்டத்தை ஆசியான் நாடுகள் ஏற்றுள்ளன. துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஆசியான் சமூக இலக்கு 2045 எனும் தொலைநோக்குக் குறிக்கோளின் அங்கமான இந்தத் திட்டம், வட்டாரத்தின் அடுத்த கட்டப் பொருளியல் ஒருங்கிணைப்புக்கு அடித்தளமிடும் என்று நம்பப்படுகிறது.

மின்னிலக்கப் பொருளியலை மேம்படுத்துவது, எரிசக்தி மீள்திறனையும் பசுமைப் பொருளியலையும் முடுக்கி விடுவது, வட்டாரங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது, உத்திபூர்வக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவது போன்ற அம்சங்களில் ஆக்கபூர்வமான மேம்பாடுகள் காணப்பட்டன.

அதன் முத்தாய்ப்பாக, சிங்கப்பூர் தலைமையேற்று வர்த்தக ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. ஆசியான் நாடுகளுக்கு இடையில் பொருள்களின் வர்த்தகம் சீராக அமைவதற்கு வித்திடும் ஒத்துழைப்பு பலனளிக்கும். ஆசியான் பொருள் வர்த்தக இணக்கத்தின் மேம்பாடுகளை ஏற்பதாகவும் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அதில் கையெழுத்திடவும் ஆசியான் நாடுகள் உறுதியளித்துள்ளன.

நிலையற்ற உலகப் பொருளியல் சூழலுக்கிடையே ஆசியான் வட்டாரத்தில் சட்ட, திட்டங்களின் அடிப்படையிலான வர்த்தகச் சூழலைப் பாதுகாத்து வர்த்தகச் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதை இந்த மேம்படுத்தப்பட்ட இணக்கம் காட்டுகிறது என்று கூறினார் துணைப் பிரதமர் கான். நீண்டகால வளர்ச்சிக்கும் போட்டித்தன்மைக்கும் வளர்ச்சியால் விளையும் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் சிங்கப்பூர் தொடர்ந்து ஆசியானுடனும் உலகப் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றும் என்று திரு கான் உறுதியளித்தார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையேற்று நடத்தும் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்புகள் உலக அளவில் நிலைத்தன்மையற்ற பொருளியல் சூழலில் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த வரிகளால் தென்கிழக்காசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகளுக்கு 32% முதல் 49% வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் திருமதி வோங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசியா செல்கின்றனர். பிரதமரின் பயணத்தின்போது துணைப் பிரதமர் கான் மே 25, 26ஆம் தேதிகளிலும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் மே 27ஆம் தேதியிலும் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பர்.

குறிப்புச் சொற்கள்