பிரதமர் வோங், அதிபர் பிரபோவோ புகைமூட்டம் உட்பட இருதரப்புப் பிரச்சினைகளைச் சமாளிக்க உறுதி

பிரதமர் வோங், அதிபர் பிரபோவோ புகைமூட்டம் உட்பட இருதரப்புப் பிரச்சினைகளைச் சமாளிக்க உறுதி

படம்: இந்தோனீசிய அதிபர் அலுவலகச் செயலகம்

28 Oct 2026 - 9:09 pm

2 mins read

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, புகைமூட்டப் பிரச்சினை உள்ளிட்ட இருதரப்புச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், புதன்கிழமையன்று (அக்டோபர் 28) தெரிவித்தார்.

“சிங்கப்பூர் பிரதமருக்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோவுக்கும் இடையே மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சு நடைபெற்றுள்ளது,” என்று டாக்டர் விவியன் கூறினார்.

“இது இரு தரப்பிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துகிறது. இனி நாங்கள் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரு தலைவர்களுக்கும் இடையே என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் விவரங்களை டாக்டர் விவியன் தெரிவிக்கவில்லை.

இந்தோனீசியத் தலைநகருக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பணி நிமித்த பயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் விவியன் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசினார்.

தமது பயணத்தின்போது, ​​அவர் செவ்வாய்க்கிழமை இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் அர்மனாத் நசீரைச் சந்தித்து, தகவல்களையும் எல்லை தாண்டிய ஆதாரங்களையும் பகிர்ந்துகொண்டு, முறைகேடான நிறுவனங்கள் மீதான விசாரணைகளை ஒருங்கிணைக்க ஒரு கூட்டுப் பணிக்குழுவை அறிவித்தார்.

மேலும், இருதரப்பு விவகாரங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதற்காக ஒரு புதிய உதவி எண்ணையும் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அறிவித்தன.

எரிவாயு ஒப்பந்தப் பிரச்சினை குறித்தும், தமது பயணத்தின்போது இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் எவ்வாறு ஒருமித்த கருத்தை எட்டின என்பது குறித்தும் கேட்டபோது, ​​சிங்கப்பூர், இந்தோனீசிய அமைச்சர்கள் ‘ஒப்பந்தப் புனிதத்தன்மைக்கு’ ஒரு பொதுவான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று டாக்டர் விவியன் கூறினார்.

அக்டோபர் 24ஆம் தேதி, இந்தோனீசியா, சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியைக் குறைக்கத் தொடங்கியது. உள்நாட்டு மின்சாரத் தேவைகளுக்காக அதிக எரிவாயுவை ஒதுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தக் குறைப்புகள் ஒப்பந்த வரம்புகளுக்கு உட்பட்டவை என்று இந்தோனீசியாவின் கீழ்நிலைத் தொழில், எரிசக்தி மாற்றத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பஹ்லில் லஹடாலியா அக்டோபர் 26ஆம் தேதி தெரிவித்தார்.

“ஒப்பந்தக் கையொப்பங்களுக்கும் ஒப்பந்தக் கடப்பாடுகளுக்கும் ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர். இது இருதரப்புப் பொருளியல்களின் நம்பகத்தன்மையையும் போட்டித்தன்மையையும் சார்ந்தது.

“வெறும் வார்த்தைகளை மட்டும் பார்க்காதீர்கள், செயல்களைக் கவனியுங்கள். ஒப்பந்தங்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒப்பந்தங்களின் புனிதத்தன்மை பேணப்பட வேண்டும். அது மிக முக்கியமானது,” என்று டாக்டர் விவியன் புதன்கிழமையன்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பிரபோவோ சுபியாந்தோவிவியன் பாலகிருஷ்ணன்ஒருங்கிணைப்புஎரிவாயு