தாய்லாந்துப் பிரதமர் அனுட்டினுக்கு பிரதமர் வோங் வாழ்த்து

தாய்லாந்துப் பிரதமர் அனுட்டினுக்கு பிரதமர் வோங் வாழ்த்து

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2026 - 11:35 pm

2 mins read

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தாய்லாந்துப் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுட்டின் சார்ன்விராக்குல்லுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அவரது தலைமையின் கீழ் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து செழித்தோங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

திரு அனுட்டின் மார்ச் 19ஆம் தேதியன்று மீண்டும் தாய்லாந்துப் பிரதமராகத் தேர்வு பெற்றார். இதன் மூலம், கடந்த இருபது ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அவர் முதன்முதலில் 2025 செப்டம்பரில் பிரதமரானார்.

சிங்கப்பூரும் தாய்லாந்தும் வலுவான பொருளியல் ஒத்துழைப்பு, உறுதியான மக்கள் தொடர்பு ஆகியவற்றால் ஒரு வலுவான மற்றும் நீடித்த நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று பிரதமர் வோங் தனது தாய்லாந்து சகாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு பகிர்ந்துகொண்டது.

இந்த இருதரப்புப் பங்காளித்துவம், உணவுப் பாதுகாப்பு, கரிய ஊக்கப்புள்ளிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆரோக்கியமான முதுமை உள்ளிட்ட புதிய துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது என்று பிரதமர் வோங் மேலும் கூறினார்.

“ஒருமித்த எண்ணம் கொண்ட கூட்டாளிகள் மற்றும் அண்டை நாடுகளாக, தாய்லாந்துடன் எங்களது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர சிங்கப்பூர் ஆவலுடன் உள்ளது,” என்று அவர் கூறினார்.

2025 நவம்பரில் திரு அனுட்டின் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது, அது பிரதமராக அவரது முதல் பதவிக்காலத்தின் ஒரு அறிமுகப் பயணமாக இருந்தது. இரு நாடுகளும் அரிசி வர்த்தகம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தின என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

“பருவநிலை மாற்றம் மற்றும் வயதான சமூகம் ஆகியவற்றால் ஏற்படும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இவை பிரதிபலிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

மார்ச் 20ஆம் தேதி பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக, சிங்கப்பூர் - தாய்லாந்து இருதரப்பு உறவுகளால் அமைக்கப்பட்ட அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த திரு அனுட்டினுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்