பிரதமர் லாரன்ஸ் வோங் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26-28) வரை அவர் அங்கிருப்பார்.
நிதியமைச்சருமான திரு வோங், ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதுடன் அதன் தொடர்பான மற்ற மாநாடுகளிலும் கலந்துகொள்வார். பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசியான் அமைப்புக்குத் தலைமைத்துவப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, ‘அனைவரையும் அரவணைத்தல், நீடித்த நிலைத்தன்மை’ எனும் கருப்பொருளுடன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. உலக அளவில் நிலவும் அரசியல், பொருளியல் சவால்களுக்கு இடையில் முன்னோக்கிய, பிணைப்புமிக்க, மீள்திறன் கொண்ட ஆசியானை உருவாக்க இந்த வட்டாரம் எடுக்கும் முயற்சிகள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
சமூக உருவாக்கத்திற்கு ஆசியான் எடுக்கும் நடவடிக்கைகளை அமைப்பின் தலைவர்கள் மறுஉறுதிப்படுத்துவர். வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வட்டாரக் கட்டமைப்பை ஊக்குவிப்பதற்குரிய வழிகள் குறித்து அவர்கள் கலந்துபேசுவர்.
ஆசியானின் பொருளியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது பற்றியும் தலைவர்கள் விவாதிப்பார்கள். ஆசியானுக்குள் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதும் புதிதாக உருவாகிவரும் மின்னிலக்க, பசுமைப் பொருளியல் துறைகளில் வாய்ப்புகளை எப்படிப் பெறுவது என்பதும் பேசப்படும்.
பிரதமர் வோங், மாநாட்டில் தலைவர்கள் பலரைச் சந்திப்பார். ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, அமெரிக்கா, ஐக்கிய நாட்டு நிறுவனம் முதலியவற்றின் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார்.
ஐந்தாவது விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டிலும் பிரதமர் வோங் பங்கேற்பார். உலகளாவிய சவால்களுக்கு இடையில் வட்டார வர்த்தகத்தையும் பொருளியல் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதில் தனது பங்கை மறுஉறுதிப்படுத்த அது முனையும்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமருடன் அவரின் துணைவியார், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முதலியோரும் செல்வர். பிரதமர் சிங்கப்பூரில் இல்லாத காலத்தில், துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.

