சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜப்பானுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் அவர் ஜப்பானில் இருப்பார் என்று திங்கட்கிழமை (மார்ச் 16) பிரதமர் அலுவலகம் அறிக்கைமூலம் தகவலைப் பகிர்ந்தது.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகியுள்ள வேளையில் பிரதமர் வோங்கின் பயணம் அமைகிறது.
தலைநகர் தோக்கியோவில் திரு வோங் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியை சந்திப்பார். திருவாட்டி தக்காய்ச்சி 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் பிப்ரவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.
பிரதமர் வோங்கின் முதல் நாள் பயணத்தின்போது அவருக்கு சிறப்பு அணிவகுப்பு வரவேற்பு வழங்கப்படும் என்றும் பின்னர் அவர் திருவாட்டி தக்காய்ச்சியின் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிட்டது.
இரவு விருந்து நிகழ்ச்சியில் வேலை சார்ந்த நடவடிக்கைகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் தமது பயணத்தின்போது மற்ற சில மூத்த ஜப்பானிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், ஜப்பானில் வாழும் சிங்கப்பூரர்கள் உள்ளிட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.
2024ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு வோங் ஆசிய வட்டாரத்தில் உள்ள முக்கியமான பங்காளி நாடுகளுக்குத் தனது அறிமுகப் பயணத்தை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்தி வருகின்றார். அதன் ஒரு பகுதியாகத் தற்போதைய ஜப்பானியப் பயணமும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் வோங்குடன் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ ஆகியோரும் செல்கின்றனர்.
2025ஆம் ஆண்டு தரவுகளின்படி சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகள் பட்டியலில் ஜப்பான் எட்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் ஜப்பானின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளிகள் பட்டியலில் சிங்கப்பூர் 14வது இடத்தில் உள்ளது.
அதேபோல், சிங்கப்பூரில் 5,300க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

