பிலிப்பீன்சில் கம்போடிய, மலேசியப் பிரதமர்களுடன் பிரதமர் வோங் சந்திப்பு

பிலிப்பீன்சில் கம்போடிய, மலேசியப் பிரதமர்களுடன் பிரதமர் வோங் சந்திப்பு

2 mins read
5f465281-b8d2-44a8-9328-978fbbc3d022
பிலிப்பீன்சின் சிபு நகரில் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டைச் சந்தித்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

சிபு: ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க பிலிப்பீன்ஸ் சென்றுசேர்ந்திருக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங் அங்கு மலேசிய, கம்போடியப் பிரதமர்களைச் சந்தித்தார்.

முதலில் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டைச் சந்தித்துப் பேசிய திரு வோங், அது பற்றிப் பின்னர் தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வளர்ச்சி காணும் என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதுடன் எல்லை தாண்டிய மோசடிகளை முறியடிப்பதிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைத் திரு வோங் சந்தித்துப் பேசினார்.

அதுபற்றித் தமது பதிவில் குறிப்பிடுகையில், இருதரப்பு விவகாரங்கள் குறித்து தாங்கள் ஆராய்ந்ததாகவும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“உலகளாவிய நிச்சயமற்ற போக்கிற்கு இடையே இருதரப்பும் பலனடையக்கூடிய அம்சங்களில் ஒத்துழைப்பு நீடிப்பது மகிழ்ச்சி. இன்னும் ஆக்ககரமான வழிகளில் இணைந்து செயல்படுவோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் மாநாட்டில் விவாதிப்பதற்கு நிறைய அம்சங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், குறிப்பாக மத்திய கிழக்கு நெருக்கடியால் இந்த வட்டாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்தும் பேசப்படும் என்றார்.

‘நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்’ என்பது 2026ஆம் ஆண்டின் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கருப்பொருள்.

2026ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள பிலிப்பீன்ஸ், மத்திய கிழக்கின் சூழ்நிலை, அதன் விளைவாக அதிகரித்துள்ள எரிபொருள், மின்சாரச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளது. அதன் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக வருகிறது.

ஈரான், அமெரிக்கா இடையே நீடித்துவரும் மோதல் போக்குக் காரணமாக அந்நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்பிலிப்பீன்ஸ்