பிலிப்பீன்சில் மே 8ஆம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொள்கிறார்.
வட்டாரத்தில் வர்த்தகம், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அக்கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்புக்கும் எரிசக்தி விலை உயர்வுக்கும் மத்தியில், பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் உள்ள சிபு நகரில் ஆசியான் மாநாடு நடைபெறவிருக்கிறது.
வட்டாரத்தின் பசுமை எரிசக்தி மாற்றம் குறித்தும் பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கும் வட்டார நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் இதரப் பங்காளிகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆசியான் தலைவர்கள் விவாதிப்பர் எனப் பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (மே 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பிரதமர் வோங்குடன் அவரது துணைவியாரும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் செல்கின்றனர்.
உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் தொடர்ச்சியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள பிலிப்பீன்ஸ், மத்திய கிழக்கின் சூழ்நிலை, அதன் விளைவாக அதிகரித்துள்ள எரிபொருள், மின்சாரச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளது.
அதன் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஈரான், அமெரிக்கா இடையே நீடித்துவரும் மோதல் போக்குக் காரணமாக அந்நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நமது எதிர்காலத்தை ஒன்றாக வழிநடத்துவோம்’ என்பது 2026ஆம் ஆண்டின் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கருப்பொருள்.

