ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முஹம்மது ஸையது சுல்தான் அலி நாஹ்யானுடன் தாம் தொலைபேசிவழி தொடர்புகொண்டு உரையாடியதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதிகரித்து வரும் நிலவரம் குறித்து அப்போது அவரிடம் பேசியதாக திரு வோங் சனிக்கிழமை (மார்ச் 7) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவிக்கரமும் ஆதரவும் அளித்து வருவதற்காக அதன் அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பதையும் நாடு திரும்ப விரும்புவோருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதிசெய்ய நமது அதிகாரிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.
“மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் உலகிற்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பதற்றத்தைத் தணித்து அமைதியை அந்த வட்டாரத்தில் மீட்டெட்டுக்கத் தேவையான வழிகளை, சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்படுத்துவார்கள் என்று நம்புவோம்.
“ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் இருக்கும் நெருங்கிய தோழமையை சிங்கப்பூர் மதிக்கிறது. சவாலான காலத்தில் அதன் அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து நிற்போம்,” என்று பிரதமர் வோங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

