பிரதமர் லாரன்ஸ் வோங், ஜூலை 2ஆம் தேதி கம்போடியாவிற்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருமான பிரதமர் வோங், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டின் அழைப்பின் பேரில் புனோம் பென்னுக்குச் செல்கிறார், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் ஹுன் மானெட் அதிகாரபூர்வ மதிய விருந்தை வழங்குவார்.
அமைதி அரண்மனையில் நடைபெறும் வரவேற்பு விழாவில் பிரதமர் வோங் பங்கேற்பார். பின்னர் அவர் மன்னர் நோரோடோம் சிகாமனியைச் சந்திப்பார். பிறகு செனட் சபை தலைவர் ஹுன் சென்னையும் திரு ஹுன் மானெட்டையும் சந்திப்பார்.
இரு நாடுகளும் தங்கள் அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகின்றன.
பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், வெளியுறவு அமைச்சு, பிரதமர் அலுவலக அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்கின்றனர்.
பிரதமர் வோங் நாட்டில் இல்லாதபோது, துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.