பிரதமர் லாரன்ஸ் வோங் இரு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு திமோர் லெஸ்டே செல்லவிருக்கிறார்.
இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஜூலை 2, 3ஆம் தேதிகளில் அவர் அங்குச் செல்கிறார்.
திரு வோங்கின் பயணத்தின்போது இருதரப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை நிறுவ இரு நாடுகளும் இணக்கம் காணவிருக்கின்றன.
கடந்த 2002ஆம் ஆண்டில் திமோர் லெஸ்டே தனி நாடான பிறகு, சிங்கப்பூர்ப் பிரதமர் ஒருவர் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறையாகும்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ சிங்கப்பூருக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, பிரதமர் லாரன்ஸ் வோங் இப்பயணத்தை மேற்கொள்வதாகப் பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (ஜூலை 1) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 3ஆம் தேதி, அந்நாட்டு அதிபர் மாளிகையில் பிரதமர் வோங்கிற்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அவர் திமோர் லெஸ்டே அதிபர் ஹோசே ராமோஸ்-ஹோர்டாவைச் சந்தித்துப் பேசுவார்.
திமோர் லெஸ்டேவின் தேசிய வளர்ச்சிக்கும், அது ஆசியான் அமைப்பில் 11வது உறுப்பு நாடாக இணைவதற்கும் சிங்கப்பூர் வழங்கிய ஆதரவைப் பாராட்டும் விதமாக, அதிபர் ராமோஸ்-ஹோர்டா அந்த நாட்டின் மிக உயரிய ‘ஆர்டர் ஆஃப் திமோர் லெஸ்டே’ (Grand Collar) விருதைப் பிரதமர் வோங்கிற்கு வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், திரு ஸனானா குஸ்மாவோவையும் திரு வோங் சந்தித்துப் பேசுவார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆலோசனைகளை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தாவதை இரு தலைவர்களும் பார்வையிடுவர். பின்னர், இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
பிரதமருடன் அவரது மனைவி, வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சையும் பிரதமர் அலுவலகத்தையும் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் திமோர் லெஸ்டே செல்கின்றனர்.
பிரதமர் வோங் அந்நாட்டுத் தலைநகர் திலியில் வசிக்கும் ஏறக்குறைய 50, 60 சிங்கப்பூரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
பிரதமர் சிங்கப்பூரில் இல்லாத இரண்டு நாள்களுக்கு, துணைப் பிரதமர் கான் கிம் யாங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

