சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரிவிதிக்க முடிவெடுத்தது குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தக் காணொளியில், எதிர்காலத்தில் வரக்கூடிய அபாயங்கள் குறித்துச் சிங்கப்பூர் தெளிந்த பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவரின் காணொளி சிங்கப்பூரில் மட்டுமன்றி உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் அந்தக் காணொளி அதிக அளவில் பார்க்கப்பட்டுவருகிறது.
திரு வோங்கின் காணொளியை இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகம் அதன் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நாள்களில் அக்காணொளி ஏறத்தாழ 3.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த ஐந்து நிமிடக் காணொளியைப் பார்த்த பலர், திரு வோங்கின் தெளிவான பேச்சையும் எதிர்காலம் குறித்த சிந்தைனையையும் பாராட்டிக் கருத்துரைத்துள்ளனர்.
“திரு வோங் நாட்டு மக்களிடம் நிலைமையை அழகாக எடுத்துரைத்தார். இவரைப்போல் மற்ற நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும்,” என்று ஒருவர் கருத்துரைத்துள்ளார்.
கனடா, அமெரிக்கா, வியட்னாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள இணையவாசிகள் பிரதமர் வோங்கைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.