பொதுத் தேர்தலுக்காக வாக்கு அட்டைகளையும் வாக்குச் சீட்டுகளையும் அச்சிடுவதற்கு நியமிக்கப்பட்ட அச்சிட்டு நிறுவனம் அண்மையில் பிணைநிரலால் (ransomware) தாக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் இதனால் இதுவரையில் தேர்தல் தொடர்பான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று தேர்தல் துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்தது.
‘டொப்பான் நெக்ஸ்ட் டெக்’ (Toppan Next Tech) என்ற நிறுவனத்திற்கு வாக்காளர்த் தரவுகளை இதுவரை வழங்கவில்லை என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு மீறலால் ஏற்படும் அபாயங்களை இயன்றவரை குறைப்பதற்கான செயல்முறை மேம்பாடுகளை அந்நிறுவனத்துடன் மேற்கொண்டு வருவதாகவும் தேர்தல் துறை கூறியது.
ஏப்ரல் 1ஆம் தேதியன்று ‘டொப்பான் நெக்ஸ்ட் டெக்’ நிறுவனம், பிணைநிரல் தாக்குதலுக்கு இலக்கானது.
அந்நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களான டிபிஎஸ் வங்கி, சீன வங்கியின் சிங்கப்பூர்க் கிளை ஆகியவற்றின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
தகவல் கசிவைக் கேள்விப்பட்டதுடன் தேர்தல் தொடர்பான எந்தச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டனவா என்பதை விசாரிக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகத் தேர்தல் துறை கூறியது.
தரவுகளைப் பொறுத்தவரை பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன.

