தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான வகுப்புகளை எடுப்பதில் சில பிரிவினருக்கு முன்னுரிமை

2 mins read
7e575eac-2e2c-406b-92d6-00545f3507bf
காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகப் போக்குவரத்துக் காவல்துறை புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், முழு நேர ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகியோருக்கு 4ஆம் பிரிவு வாகன ஓட்டுநர் வகுப்புகளை எடுப்பதற்குத் திங்கட்கிழமையிலிருந்து (செப்டம்பர் 15) முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. தேவை அதிகரித்திருப்பதைச் சமாளிக்கவே அவ்வாறு செய்யப்படுகிறது.

அத்தகைய வகுப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய நடவடிக்கைகளைப் போக்குவரத்துக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

காத்திருக்கும் நேரம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக அது ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) சொன்னது.

4ஆம் பிரிவு என்பது 2,500 கிலோகிராமுக்கும் மேற்பட்ட எடை கொண்ட மோட்டார்வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைக் குறிக்கும்.

அத்தகைய வகுப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் கூடி ஏறக்குறைய 13 மாதங்களாக உள்ளது. இந்த ஆண்டு (2025) ஜூலை நிலவரப்படி கிட்டத்தட்ட 3,900 பேர் வகுப்புகளில் சேரக் காத்திருப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

தற்போது கனரக வாகனம் ஓட்ட விரும்புவோருக்குப் பொதுவாக ‘முதலில் வருவோர்க்கு முதலில் சேவை’ எனும் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், கனரக வாகனங்களை ஓட்டுவதற்காகச் சேர்க்கப்பட்ட வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் மட்டுமே வகுப்புகளுக்குப் பதிந்துகொள்ள முடிந்தது. அப்போது மாதந்தோறும் பயின்றோரின் எண்ணிக்கை சராசரியாய் 200ஆக இருந்தது.

2023 மே மாதம் அது மாற்றப்பட்டது. ஊழியர்களைக் கையாள்வதில் நீக்குப்போக்கு தேவை என்று தொழில்துறையினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வேலை தொடர்பான தேவை அகற்றப்பட்டது.

அதன்படி 3ஆம் பிரிவு அல்லது 3சி (3C) பிரிவு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அனைவரும் 4ஆம் பிரிவு ஓட்டுநர் வகுப்புகளுக்கும் பதிந்துகொள்ளலாம்.

“அதன் பிறகு 4ஆம் பிரிவு வகுப்புகளுக்குப் பதிந்துகொண்டோர் எண்ணிக்கை வெகுவாகக் கூடியது. சென்ற ஆண்டு (2024) அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தைத் தொட்டது. 1,000க்கும் மேற்பட்டோர் புதிதாகப் பயிற்சியில் சேர்ந்தனர். இந்த ஆண்டின் முதற்பாதியில் மாதந்தோறும் சராசரியாக 650 பேர் புதிதாகக் கனரக வாகனமோட்டக் கற்றுக்கொண்டனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.

4ஆம் பிரிவு வாகனங்களை ஓட்டுவோருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெறுவோர் விகிதம் தற்போது சுமார் 30 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. 2022, 23ஆம் ஆண்டுகளில் அது 40 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்