புதிய தனியார் அடுக்குமாடி வீடுகள் அறிமுகப்படுத்தும்போது முக்கிய விருந்தினர்களுக்கான ‘விஐபி’, முன்னுரிமை என்ற முறையில் விற்பனை செய்யப்படும் நடைமுறை குறித்து சொத்து விற்பனை நிறுவனங்களுடன் சொத்து முகவர் மன்றம் (சிஇஏ) விவரம் கேட்டு வருகிறது.
இத்தகைய முன்னுரிமை அளிக்கப்படும் முன்னுரிமை நடைமுறைகள் சட்டபூர்வமானவை என்றாலும் பொதுமக்களுக்கான விற்பனை தொடங்குவதற்கு முன்பே முகவர்களும் குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களும் முந்திக்கொண்டு வீடுகளை வாங்குவதால் பொதுமக்களுக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகளே மிஞ்சுகின்றன என்ற கவலை எழுந்துள்ளது.
சிங்கப்பூரின் நான்கு ஆகப்பெரிய வீட்டுச் சொத்து விற்பனை நிறுவனங்களில், இத்தகைய கலந்துரையாடலில் சிஇஏ ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
தனியார் வீடுகளை வாங்கும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், வீடுகளை வாங்க விரும்பும் முகவர்கள் தகவல் வெளியிடும் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ‘ஆரஞ்ச்டீ’ நிறுவனத்தின் முகவருக்கான தலைமை அதிகாரி ரேமண்ட் கூ தெரிவித்தார்.
ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப், சிஇஏ தங்களுடன் நடத்திய கலந்துரையாடலில், தற்போதுள்ள நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் வீட்டுச் சொத்துச் சந்தையில் வெளிப்படைத்தன்மை, நிபுணத்துவம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பதற்கான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்றார்.
“விதிமுறை மாற்றங்கள், தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எங்களுடைய கொள்கைகளையும் நடைமுறைகளையும் நாங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்வோம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 2025 டிசம்பரில் ‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ செய்தி ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
‘எமரால்ட் ஆஃப் காத்தோங்’ போன்ற சில புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாகவே அங்குள்ள வீடுகளில் 20 விழுக்காடு வரை சொத்து முகவர்களால் வாங்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2024 செப்டம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு வரிசைகள் மூலம் சொத்து முகவர்கள் 635 வீடுகளை வாங்கியுள்ளனர்.
இது, அந்தக் காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த புதிய தனியார் வீடுகளில் சுமார் 4.2 விழுக்காடாகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் இதர முக்கிய விருந்தினர்களுக்கான(விஐபி) அல்லது ஆரம்ப விற்பனைகள் இதில் சேர்க்கப்படவில்லை.
இதனால் ஒட்டுமொத்த ஆரம்ப விற்பனையின் பங்கு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்தச் செய்தி சுட்டிக்காட்டியது.
இதைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 15ல் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர் கருத்துப் பகுதியில் வெளியான கடிதம் ஒன்றில் வீடுகள் அறிமுகமாவதற்கு முன்பே முகவர்களே வீடுகளை வாங்குவது தொழில்துறைக்கு முரண்பாடானது என்று வாசகர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார்.
இது குறித்து 2026 ஜூலை 3ல் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிஇஏயின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தொழில்துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துகளை அறிய தொடர்ந்து சொத்து விற்பனை நிறுவனங்களுடனும் பங்காளிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.


