மகன்களைத் துன்புறுத்திய தாய்க்குச் சிறை

மகன்களைத் துன்புறுத்திய தாய்க்குச் சிறை

2 mins read
3b05187f-0f3a-41df-b9d2-9284ea2cadaa
36 வயதான அந்தப் பெண், சிங்கப்பூர் நிரந்தரவாசி. பிள்ளைகளின் அடையாளத்தைக் காக்கும் விதமாக அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காதலனின் கைப்பேசியையும் மின்விசிறியையும் ஐந்தாவது மாடியிலிருந்து வீசியதற்காகவும் தனது இரண்டு மகன்களையும் அடித்து துன்புறுத்தியதற்காகவும் 36 வயது பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

36 வயதான அந்தப் பெண், சிங்கப்பூர் நிரந்தரவாசி. பிள்ளைகளின் அடையாளத்தைக் காக்கும் விதமாக அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. துன்புறுத்தப்பட்ட சிறுவர்களின் வயது எட்டு, ஒன்பது ஆகும்.

அந்தப் பெண் விவாகரத்து பெற்றதன் காரணமாக மகன்களைத் தனது வளர்ப்பில் வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அந்தப் பெண்ணின் மூத்த மகன் தனது ஆடையிலேயே மலம் கழித்துவிட்டார். அதனால் கோபமடைந்த அந்தப் பெண் பலமுறை சிறுவனின் தலையில் தாக்கினார்.

இதனால் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. மருத்துவரிடம் கொண்டு செல்லாமல் வீட்டிலேயே சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய் தங்களை அடிக்கடி அடிப்பதாகச் சிறுவர்கள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். அதையடுத்து தந்தை காவல்துறையில் புகார் கொடுத்தார்.

பின்னர் நவம்பர் மாதம், அப்போது அந்தப் பெண்ணின் காதலனாக இருந்த 55 வயது சிங்கப்பூரர் அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆடவரின் கைப்பேசியையும் வீட்டில் இருந்த மின்விசிறியையும் அந்தப் பெண் ஐந்தாவது மாடியிலிருந்து வீசினார்.

இதுகுறித்து மற்றொரு ஆடவர் புகார் கொடுத்தார். அதையடுத்து அந்தப் பெண்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பெண் செய்த குற்றத்திற்காக அவருக்கு 15 மாதங்கள் மற்றும் 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்