பணிஓய்வுபெற்ற 68 வயது முதியவர் தமது வீட்டின் அருகே அட்டைப்பெட்டியால் அமைக்கப்பட்ட பூனைகளுக்கான இருப்பிடங்கள் சுகாதாரக் கேடாக இருந்ததால் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
தம்முடைய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதுபற்றி பலமுறை கருத்துகள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவ்வாறு செய்யத் தூண்டப்பட்டதாக அவர் கூறினார்.
தீயைக் கொண்டு குறும்புச் செயல் புரிந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு மூன்றுமாதச் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் ) நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.
பறவைகளையும், பூச்சிகளையும் அந்த அசுத்தமான பூனைகளுக்கான இருப்பிடங்கள் ஈர்த்ததாகக் கூறிய கோ டெங் பூ என்ற அந்த ஆடவர், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 4ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசித்துவந்தார்.
தமது வீட்டுக்கு அருகே இருந்த புளோக் 261, புளோக் 263 ஆகிய கட்டடங்களுக்கு இடையே உள்ள பொதுக் கூடாரத்தில், பல அட்டைகள் பூனைகளுக்கென தனிப்பட்ட முறையில் அடுக்கப்பட்டு அவை வசிக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
அவற்றுள் உணவும் நீரும் வைக்கப்பட்டன. அதனால் பறவையினங்களும் பலவித ஊர்ந்து செல்லும் பூச்சி இனங்களும் அதனுள் செல்லத் தொடங்கின. அதனை அவர் ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இருமுறை அவர் அப்பகுதிக்குத் தீயிட்டார்.
2025 அக்டோபர் மாதம் நடந்த சம்பவங்கள் குறித்து நவம்பர் மாதம் பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியது. கண்காணிப்புக் கேமராக்களில் முதியவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அத்தொகுதி நகரமன்றம் $913 தொகையைச் செலவிட்டு தீயினால் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நேர்ந்தது. அத்தொகையை ஆடவர் திருப்பிச் செலுத்திவிட்டார்.


