திருட்டு, தொல்லை தருதல் ஆகிய குற்றங்களுக்கு ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை விதிப்புக்குக் காத்திருந்த ஆடவர் தனிநபர் உத்தரவாதத்துடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அந்தக் காலகட்டத்தில் அவர் மீண்டும் குற்றம் புரிந்தார். ராஃபிள்ஸ் பிளேஸ் வட்டாரத்தில் உள்ள யுஓபி கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்ள பள்ளிவாசல் வெளியே அவர் தீ மூட்டினார்.
மார்டின் சீ ஹொக் லெங் என்ற அந்த 50 வயது ஆடவர் புதன்கிழமை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் தீயைக் கொண்டு குறும்புச் செயலாற்ற முயல்தல் எனப்பட்ட மூன்றாவது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அவர் போட்கீ பகுதியில் இருந்து ஒரு இரும்புத் தகர டின்னை எடுத்துக்கொண்டு அருகே இருந்த மஸ்ஜித் மௌலானா முகம்மது அலி என்ற அந்தப் பள்ளிவாசலை நெருங்கினார். யுஓபி பிளாசாவின் கீழ்தளத்தில் (பேஸ்மன்ட்) அப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.
பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள மேடையில் அவர் அந்த டின்னை வைத்தார். பிறகு அதனுள் ஓர் உள்ளாடையைத் திணித்துத் தீ மூட்டிவிட்டு அவர் அங்கிருந்து நடந்து சென்றார்.
வழிப்போக்கர் ஒருவர் எச்சரித்ததை அடுத்துப் பள்ளிவாசல் ஊழியர்கள் தீயை அணைத்தனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் இச்செயல் பதிவானதால் சீ அடையாளம் காணப்பட்டு பிறகு கைதுசெய்யப்பட்டார்.
