எம்.ரவியுடன் போதைப்பொருள் உட்கொண்ட ஆடவர்க்குச் சிறைத் தண்டனை

எம்.ரவியுடன் போதைப்பொருள் உட்கொண்ட ஆடவர்க்குச் சிறைத் தண்டனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Nov 2026 - 7:58 pm

2 mins read

எம்.ரவி என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமியுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்ட ஆடவருக்கு ஈராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் உட்கொண்டது, தமது வீட்டில் போதைப்பொருள் உட்கொள்ள அனுமதி வழங்கியது, நீதிச் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட குற்றங்களை 41 வயது ‌‌‌ஷான் லூ ஜியன் என்பவர் திங்கட்கிழமை (நவம்பர் 16) ஒப்புக்கொண்டார்.

போதைப்பொருள் உட்கொண்ட பின் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட 56 வயது ரவி, அளவுக்கு அதிகமான போதைப்பொருளை உட்கொண்டதால் கழிவறையில் மயங்கி உயிரிழந்தார்.

2023ஆம் ஆண்டு டேட்டிங் செயலியில் சந்தித்துக்கொண்ட லூவும் ரவியும் கடந்த ஆண்டு மீண்டும் இணைந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, நள்ளிரவுக்குப் பின் 12.30 மணியளவில் தம்மைச் சந்திக்க முடியுமா என்று ரவி, லூவைக் கேட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து இருவரும் சம்மதித்தனர்.

ரவி தமது வீட்டிற்கு வரும்முன் காமா புடாய்ரோலெக்டோன் என்ற போதைப்பொருளைக் குளிர்பானத்தில் கலந்து லூ அருந்தியிருந்தார்.

சிறிது நேரத்தில் லூவின் வீட்டிற்கு சிறிய பொட்டலத்தில் ‘மெத்’ போதைப்பொருளுடன் வந்த ரவி, லூவுடன் அதைச் சேர்ந்து உட்கொண்டார்.

பின்னிரவு 2.30 மணியளவில் கூடுதலான போதைப்பொருளை உட்கொண்ட ரவி, கழிவறையில் மயங்கி விழுந்தார்.

ரவியை எழுப்ப முடியாமல் போனதை அடுத்து லூ அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தார்.

மருத்துவ உதவியாளர்கள் ரவியை உயிர்ப்பிக்க முற்பட்ட சமயத்தில், லூ கழிவறையில் போதைப்பொருளை அப்புறப்படுத்த முயன்றார்.

சுயநினைவை இழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குப் கொண்டுசெல்லப்பட்ட ரவி உயிரிழந்ததாகப் பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

அதே நாளில் கைதுசெய்யப்பட்ட லூவின் சிறுநீர் மாதிரியில் போதைப்பொருளுக்கான தடயங்கள் கண்டறியப்பட்டன.

குறிப்புச் சொற்கள்