பிரித்தம் சிங் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தினார்: அரசுத் தரப்பு வழக்கறிஞர்

2 mins read
be40d8b3-b5d4-4f6b-aed8-d6c790d306aa
அரசு நீதிமன்ற வளாகத்தில் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பு கூறியதையடுத்து, தற்காப்புத் தரப்புக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.

அக்குழுவிடம் பொய்யுரைத்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு சிங்கிடம் 11வது நாளாக புதன்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற விசாரணையில் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஆங் செங் ஹோக் குறுக்கு விசாரணை நடத்தினார்.

திரு சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் கூறியதும் நீதிமன்றத்தில் சொன்னதும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக வழக்கறிஞர் ஆங் வாதிட்டார்.

திரு சிங் கொடுத்துள்ள ஆதாரத்தை அவர் மாற்றுவதாகவும் விவரங்களை வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுப்பதாகவும் திரு ஆங் சாடினார்.

செவ்வாய்க்கிழமை முதன்முதலாக விசாரணைக்கூண்டில் ஏறிய திரு சிங், நாள் முழுவதும் தம் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமபோயால் விசாரிக்கப்பட்டார். தற்காப்புத் தரப்பின் விசாரணை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற விவாதத்தின்போது இருதரப்பினரும் அவ்வப்போது குறுக்கிட்டுப் பேசினர்.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முதன்முதலில் பொய்யுரைத்ததை விசாரிக்க நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்குத் துணையாக தாம் காவல் நிலையத்திற்குச் சென்றதாகத் கூறியது பொய் என பின்னர் திருவாட்டி கான் ஒப்புக்கொண்டார்.

புதன்கிழமை காலை கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குள் தற்காப்புத் தரப்பு அதன் விசாரணையை முடித்த பிறகு, திரு ஆங் விசாரிக்கத் தொடங்கினார். நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவினர் முன்னிலையில் தாம் உண்மையை உரைத்ததாகத் திரு சிங் விசாரணையின்போது தொடர்ந்து கூறிவந்தார்.

இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின்போது, திரு ஆங், “அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் இந்த விவகாரம் மீண்டும் எழவில்லை என்றால் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டாம் என்று நீங்கள் திருவாட்டி கானிடம் சொல்லியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளீர்கள்.

“ஆனால், அந்த விவகாரம் நாடாளுமன்ற அமர்வில் எழுந்தாலும் எழாவிட்டாலும் திருவாட்டி கான் அதனைத் தெளிவுபடுத்தி ஆகவேண்டும் என்று நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் நீங்கள் கூறியுள்ளீர்கள். இவை முன்னுக்குப் பின் முரணானவை. இவற்றில் எது உண்மை?” எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த திரு சிங், இந்த உண்மையைத் திருவாட்டி கான் அந்த நாடாளுமன்ற அமர்விலோ அல்லது இன்னொரு நாளிலோ தெளிவுபடுத்தி ஆகவேண்டும் என்றே எதிர்பார்த்ததாகக் கூறினார்.

அக்டோபர் 3ஆம் தேதி நடந்த சந்திப்பின்போது, மறுநாளே திருவாட்டி கான் உண்மையைச் சொல்ல முடியாது என்பதைத் திரு சிங் தெரிந்துகொண்டதாக அரசுத் தரப்பு வாதிட்டது.

தமக்குப் பாலியல் கொடுமை நடந்ததாக திருவாட்டி கான், தம் பெற்றோரிடம் தெரிவிக்க முடியாத நிலையில் எப்படி மறுநாளுக்குள் உண்மையை ஒப்புக்கொள்ளும் அறிக்கையைத் தயாரித்திருக்க முடியும் என அரசுத் தரப்பு கேள்வி எழுப்பியது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருவாட்டி கான் உண்மையைச் சொல்லப்போவதில்லை என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை என்று திரு சிங் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்