பிரித்தம் சிங் வழக்கு: இரண்டாம் நாள் விசாரணை

2 mins read
3c08b9d0-4721-4145-abb4-34dd40f7dcb4
அரசு நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) காலை வந்த பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) காலை 9.05 மணிக்கு அரசு நீதிமன்றம் வந்தடைந்துள்ளார். அவரது வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோயும் உடன்வந்துள்ளார்.

முன்னதாக, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 8.45 மணியளவில் நீதிமன்றத்துக்கு வந்தார்.

பிரித்தம் சிங்கின் தற்காப்பு வழக்கறிஞர்கள் இன்று திருவாட்டி ரயீசா கானிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்வர்.

16 நாள் நீடிக்கவுள்ள இந்த வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்போரில் திருவாட்டி ரயீசா கானும் ஒருவர்.

பாட்டாளி கட்சியின் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், முன்னாள் கட்சித் தொண்டர்கள் லோ பெய் யிங், யுதிஷ்த்ரா நாதன் ஆகியோரும் சாட்சிகளில் அடங்குவர்.

சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவராகவும் உள்ள பிரித்தம் சிங், நேற்று அரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆளானபோது தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

48 வயதாகும் சிங், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10, 15ஆம் தேதிகளில் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் இரண்டு பொய்களைக் கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருவாட்டி ரயீசா கான், திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைசல் மனாப் ஆகியோருடன் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பிறகு திருவாட்டி கான் தான் பொய்யுரைத்ததை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ள விரும்பியதாகத் திரு சிங் கூறியிருந்தார். இது பொய் என்பதை முதல் குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.

அத்துடன், திருவாட்டி ரயீசா கானிடம் தாம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பேசியபோது, அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததை மறுநாள் அமர்வில் ஒப்புக்கொள்ளும்படிக் கூறியதாகச் சொன்னார். அதுவும் பொய் என்று இரண்டாவது குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்