பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிங் பிரித்தம் சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் பொய்யுரைத்ததன் பேரில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் பதின்மூன்று நாள்களாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அவ்வழக்கில் அடுத்த நீதிமன்ற அமர்வு பிப்ரவரி 17ஆம் தேதியன்று மீண்டும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, துணைத் தலைமை மாவட்ட நீதிபதி லியூக் டான் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு சிங் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலங்களும் நீதிமன்ற விசாரணையின்போது அவர்கூறிய விவரங்களும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆங் செங் ஹோக் தெரிவித்துள்ளார்.
13வது நாளாக நடைபெற்ற விசாரணையின் தொடக்கத்தில் திரு சிங் காவல்துறையிடம் சமர்ப்பித்த ஐந்து வாக்குமூலங்கள் (statements) நீதிமன்றத்தில் ஆராயப்பட்டன.
வியாழக்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில் அந்த ஐந்து வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் சேர்க்கும்படி வழக்கறிஞர் ஆங் கேட்டுக்கொண்டார். ஆறாவது வாக்குமூலமும் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை விசாரணையின் தொடக்கத்தில் கேள்வி கேட்ட அரசு வழக்கறிஞர் ஆங், 2021ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று பாட்டாளிக் கட்சியினருடனான சந்திப்பு ‘உண்மையை அடக்குவது’ பற்றியதா என்று கேட்டார்.
2023 ஜனவரியில் திரு சிங், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கும் அவரது நீதிமன்ற வாக்குமூலத்திற்கும் இடையே முரண்கள் இருப்பதாக திரு ஆங் வாதிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘காவல்துறையிடம் சிங் கூறியது தவறு’
2021 அக்டோபர் 11ஆம் தேதியன்று திரு சிங், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம், பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளருமான லோ தியா கியாங் ஆகியோர் சந்தித்தது பற்றி திரு ஆங் கேள்வி கேட்டார்.
பாட்டாளிக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பில் திரு லோ தங்களுக்கு எந்த ஆலோசனையையும் கூறவில்லை என்றும் திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் உண்மையைச் சொல்ல எல்லோரும் காத்திருந்தனர் என்றும் திரு சிங் காவல்துறையிடம் கூறியதை திரு ஆங் சுட்டினார்.
திரு சிங்கும் திருவாட்டி லிம்மும் பொய்யைத் தெளிவுபடுத்தும்படி திருவாட்டி கானிடம் சொன்னது தமக்குத் தெரியாது என்று நீதிமன்றத்தில் திரு லோ தெரிவித்தார்.
“நான் சொல்வது என்னவென்றால், திரு லோ உங்களுக்கு அறிவுரை வழங்கினார். திருவாட்டி கான் பொய்யை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதே அந்த அறிவுரை,” என்றார் திரு ஆங்
“ஆம், அது திரு லோவின் கண்ணோட்டம். ஆனால், அவரிடம் பேசுவதற்கு முன்னரே எங்களுக்கும் அதே கண்ணோட்டந்தான் இருந்தது,” என்றார் திரு சிங்.
‘நீங்களும் கேட்கவில்லை, அவரும் கேட்கவில்லை’
நாடாளுமன்றத்தில் திருவாட்டி கான் 2021 ஆகஸ்ட் 3 தேதியன்று முதன்முதலாகப் பொய்யுரைத்தார். அந்த அமர்வின்போது, பாலியல் வன்முறைக் கதையை ஆதாரங்களுடன் கூறும்படியான குறிப்புகளை திருவாட்டி கானிடம் அனுப்பிய திரு சிங், அக்டோபர் 4ஆம் தேதியன்று நடந்த அமர்வுக்குமுன் அதுபோல எதையும் ஏன் அனுப்பவில்லை என்று வழக்கறிஞர் ஆங் கேட்டார்.
“ஆனால், அக்டோபர் 3 வரையிலும் நீங்கள் எதையும் தெளிவுபடுத்தவில்லை, ஏதோ விளக்க முடியாத காரணத்தால் திருவாட்டி கானும், ‘(பொய்யைத்) தெளிவுபடுத்தும் அறிக்கையைத் தயாரித்துள்ளேன், நீங்கள் பார்க்கிறீர்களா?’ என்று உங்களிடம் கேட்கவும் இல்லை,” என்று திரு ஆங் கூறினார். அதனைத் திரு சிங் ஒப்புக்கொண்டார்.
நன்றி கூறிய பிரித்தம்
நீதிமன்ற விசாரணையின் முடிவில் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய், தம் கட்சிக்காரர் திரு சிங் மீதான மறுவிசாரணையைச் சுருக்கமாக மேற்கொண்டார்.
திருவாட்டி கானின் பொய்யுரையைப் பற்றி கட்சித் தலைவர்கள் அறிந்திருந்ததைக் கட்சியின் மத்திய செயற்குழு எப்போது அறிந்தது, ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ரயீசா கானின் பொய்யுரை மறக்கப்படுமா என்று திரு சிங் நினைத்தாரா இல்லையா உள்ளிட்ட வினாக்கள் திரு சிங்கிடம் மீண்டும் கேட்கப்பட்டன.
தற்காப்புத் தரப்பு வேறு எந்தச் சாட்சிகளையும் வரவழைக்கவில்லை.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு செய்தியளார்களிடம் பேசிய திரு சிங், “செய்யவேண்டிய வேலை இன்னும் உள்ளது,” என்றார்.
நீதிமன்ற விசாரணையால் தமது தொகுதியான யூனோசில் வட்டாரவாசிகளைச் சந்திக்கவில்லை என்று கூறிய திரு சிங், நவம்பர் 11லிருந்து அதனை மீண்டும் தொடரப்போவதாகக் கூறினார்.
தமக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கும் மலைபோலத் துணையாக உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.