வழக்கறிஞர் தகுதியை இழந்தார் பிரித்தம் சிங்

வழக்கறிஞர் தகுதியை இழந்தார் பிரித்தம் சிங்

2 mins read
1dbb6e1a-8686-4d51-95d7-e46d013d2bed
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் (வலமிருந்து இரண்டாமவர்). - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான தகுதி பறிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 2021ல் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தது தொடர்பில் திரு சிங் நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வழக்கறிஞராகப் பணியாற்றாத திரு சிங்கின் தகுதி பறிக்கப்படுவதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கியது. அந்த நீதிமன்றம்தான் சட்டத் துறைக்கான ஆக உயரிய ஒழுங்குக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். தவறாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்ய அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன், நீதிபதி கண்ணன் ரமேஷ், நீதிபதி சீ கீ ஓன் ஆகியோர் அந்த நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சிங், தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட 14,000 வெள்ளி அபராதத்தை அவர் செலுத்தினார்.

ஒழுங்கு நடவடிக்கை

கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி, சட்டத் தொழில் சட்டத்தின்படி சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

அச்சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் ஒருவர் ஏமாற்றியது அல்லது நாணயமாக நடந்துகொள்ளாதது நிரூபிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சங்கம் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கவேண்டும்.

இதுவரை நடந்துள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்போது திரு சிங்கின் வழக்கறிஞர் தகுதி பறிக்கப்படவேண்டும் என்று வழக்கறிஞர் சங்கத் தரப்பு வாதிட்டது. மூத்த வழக்கறிஞர் கவிண்டர் புல் அச்சங்கத்தைப் பிரதிநிதித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் திரு சிங் பொதுச் சேவையாற்றுவது விதிவிலக்காக இருக்கமுடியாது என்று திரு புல் குறிப்பிட்டார்.

பொதுச் சேவையில் திரு சிங்குக்கு இருக்கும் முக்கியத்துவம், அவரின் தவறான நடத்தையினால் ஏற்பட்ட தாக்கத்தை மேலும் மோசமாக்குகிறதே தவிர அதைக் குறைக்கவில்லை என்று திரு புல் சொன்னார்.

திரு சிங்கைப் பிரதிநிதித்த மூத்த வழக்கறிஞர் செல்வ ராஜா, தமது கட்சிக்காரரின் வழக்கறிஞர் தகுதி பறிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டரீதியாகப் போதுமான காரணங்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரித்தம் சிங்வழக்கறிஞர்உரிமம்தீர்ப்புபாட்டாளிக் கட்சி