பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளரும் சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.
நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்ததாக சிங்குக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மொத்தம் 14,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயிசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிங், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 நாள்கள் நீடித்த நீதிமன்ற விசாரணையில் சிங், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்ச அபராதமாக 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்துத் தாம் மேல்முறையீடு செய்யப்போவதாக சிங், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் சிங் மீது நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. உண்மையை மட்டுமே பேசப்போவதாக வாக்குறுதி அளித்த பிறகு சிங் தமது வாக்குமூலத்தில் உண்மையைக் கூறவில்லை என்று நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழு அறிக்கையில் தெரிவித்து ஈராண்டுக்கும் மேலான காலகட்டத்துக்குப் பிறகு அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பிப்ரவரி 17ஆம் தேதி சிங் வழக்கில் தீர்ப்பளிக்க இரண்டு மணிநேரத்துக்கும் அதிக நேரம் ஆனது. அதனைத் தொடர்ந்து அவரின் அரசியல் வருங்காலம் குறித்த கேள்விகள் எழுந்தன.
அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த சிங், “இப்போது நான் மேலும் தீவிரமாகச் செயல்படுவதுதான் முக்கியம், விலகிக்கொள்ளக்கூடாது,” என்றார்.
சிங், கிட்டத்தட்ட 40 ஆண்டு காலத்தில் குற்றவியல் சட்டத்தின்கீழ் தவறு இழைத்தது நிரூபிக்கப்பட்ட முதல், பொறுப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகும். செவ்வாய்க்கிழமை அவரின் மேல்முறையீட்டு மனு குறித்த நீதிமன்ற விசாரணையை நீதிபதி ஸ்டீவன் சோங் உச்சநீதிமன்றத்தில் நடத்துவார்.

