தனியார் வீடுகளின் விலைகள் 2025ல் 3.4% உயர்வு

2 mins read
45a84d66-a4d9-4e09-bc4a-abb827ece96f
நாலாம் காலாண்டில், தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் 0.7 விழுக்காடு கூடியிருந்தன. ஒப்புநோக்க, மூன்றாம் காலாண்டில் அவை 0.9 விழுக்காடாக இருந்தன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் வீடுகளின் விலையேற்றம் சென்ற ஆண்டு (2025) 3.4 விழுக்காடாக இருந்தது. வீட்டு விலையேற்றத்தின் வேகம் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மெதுவடைந்துள்ளது. 2024ல் வீட்டு விலைகள் 3.9 விழுக்காடு கூடின.

புதிய வீடுகளின் விலைகள் நாலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு உச்சம் தொட்ட நிலையிலும், விலையேற்றத்தின் வேகம் தணிந்துள்ளது. நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

சென்ற ஆண்டின் 3.4 விழுக்காட்டு விலையேற்றம், 2023ஆம் ஆண்டின் 6.8 விழுக்காட்டு உயர்வையும் 2022இன் 8.6 விழுக்காட்டு அதிகரிப்பையும்விட கணிசமான அளவுக்குக் குறைவு. 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், தனியார் வீடுகளின் விலையேற்றம் 2.2 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.

நாலாம் காலாண்டில், தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் 0.7 விழுக்காடு கூடியிருந்தன. ஒப்புநோக்க, மூன்றாம் காலாண்டில் அவை 0.9 விழுக்காடாக இருந்தன. புதிய கூட்டுரிமை வீடுகள், தரைவீடுகள் ஆகியவற்றின் விலைகள் கூடியபோதும் தனியார் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் குறைந்ததே அதற்குக் காரணம்.

தரைவீடுகளின் விலைகள் 3.5 விழுக்காடு உயர்ந்தன. 2023இன் நாலாம் காலாண்டுக்குப் பிறகு ஆக வலுவான காலாண்டு விலையேற்றம் அது. ஒப்புநோக்க, மூன்றாம் காலாண்டில் வீடுகளின் விலையேற்றம் 1.4 விழுக்காடாகப் பதிவானது.

சென்ற ஆண்டு முழுமைக்கும் தரைவீடுகளின் விலைகள் 7.7 விழுக்காடு உயர்ந்தன. 2024ல் அவை 0.9 விழுக்காட்டு அதிகரிப்பையே கண்டன.

கடந்த ஆண்டு, எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக 10,667 புதிய தனியார் வீடுகள் விற்பனையாயின. 2024ல் விற்கப்பட்ட 6,469 வீடுகளைக் காட்டிலும் அது அதிகம். சென்ற ஆண்டின் பரிவர்த்தனை, நாலாண்டு காணாத உச்சத்தைத் தொட்டது. 2021ல் 13,027 வீடுகள் விற்கப்பட்டன.

இருப்பினும், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில், பரிவர்த்தனை விகிதம் 27.1 விழுக்காடு சரிந்தது. கைகூடிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 5,399ஆக இருந்தது. அதற்கு முந்திய காலாண்டில் பதிவான 7,404 வீடுகளைக் காட்டிலும் அது குறைவு.

“விடுமுறைக் காலம் என்பதால் சொத்து மேம்பாட்டாளர்கள், புதிய வீடுகளை டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தாமல் தள்ளிப்போடுவது வழக்கம். அது, சந்தை தணிந்துள்ளது என்பதற்கான அறிகுறியன்று,” என்று இஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க்கஸ் சூ கூறினார்.

சென்ற ஆண்டு முழுமைக்கும், தனியார் கூட்டுரிமை வீடுகளின் விலைகள் 2.4 விழுக்காடு கூடின. 2024ல் விலையேற்றம் 4.7 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்