தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீட்டு விலைகள் இரண்டாம் காலாண்டில் 1% உயர்ந்தன

2 mins read
7259a204-8695-4b8a-a1e0-6e04a42017b3
இரண்டாம் காலாண்டில் 11 பங்களாக்கள் $300 மில்லியனுக்கும் அதிகமாக விலைபோயின. - படம்: சாவ்பாவ்

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் ஒரு விழுக்காடு உயர்ந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட ஆக அண்மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டைவிட அது 0.5 விழுக்காடு அதிகம். முந்தைய காலாண்டைவிட அது 0.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் வீட்டு விலைகளின் வளர்ச்சி மெதுவடைந்தது. அப்போது அது 2.3 விழுக்காடு வளர்ச்சிக் கண்டது.

இவ்வாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்புநோக்க இரண்டாம் காலாண்டில் பதிவான விற்பனை 65 விழுக்காடு சரிந்தது. முதல் காலாண்டில் 3,375 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இரண்டாம் காலாண்டில் 1,212 வீடுகள் விற்கப்பட்டன.

வீடுகளை வாங்குவோர் பின்வாங்கியது, ஏப்ரலிலிருந்து புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து சில நிறுவனங்கள் புதிய தொகுதி வீடுகளை விற்பனைக்கு விடாததும் அதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

இரண்டாம் காலாண்டில் ஏறக்குறைய 1,520 கட்டி முடிக்கப்படாத தனியார் வீடுகள் விற்பனைக்கு வந்தன. அதற்கு முந்தைய காலாண்டில் 3,139 அத்தகைய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

மறுவிற்பனை வீடுகளின் இரண்டாம் காலாண்டில் 2.3 விழுக்காடு உயர்ந்தன. முதலாம் காலாண்டில் 3,565 வீடுகள் விற்பனையாகின. இரண்டாம் காலாண்டில் 3,647 வீடுகள் விற்பனையாயின.

தரை வீடுகளின் விலையும் இரண்டாம் காலாண்டில் 2.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. முந்தைய காலாண்டில் அது 0.4 விழுக்காடாக இருந்தது.

இரண்டாம் காலாண்டில் 11 பங்களாக்கள் $300 மில்லியனுக்கும் அதிகமாக விலைபோயின. முதலாம் காலாண்டில் அத்தகைய 2 பங்களாக்கள் மட்டும் விற்கப்பட்டதாக ஹட்டன்ஸ் ஆசிய நிறுவனத் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.

இதற்கிடையே, தனியார் வீட்டுச் சந்தை இரண்டாம் காலாண்டில் 0.8 விழுக்காடு அதிகரித்தது.

அனைத்துலக வர்த்தகப் போர் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளியல் சூழலால் தனியார் வீட்டுச் சந்தை பழைய நிலைக்கு முழுமையாகத் திரும்ப இன்னும் கூடுதல் காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்