தனியார் வீடுகளின் விலைகள், கடந்த ஆண்டில் (2025) மிதமான வளர்ச்சி கண்டன. புதிய வீடுகளின் விற்பனை நான்காண்டு காணாத உச்சத்தைத் தொட்டபோதும், வீட்டு விலை பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை.
ஒட்டுமொத்தமாக, தனியார் வீட்டு விலைக் குறியீடு சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் மெதுவான வளர்ச்சி கண்டு, 0.6 விழுக்காடு அதிகரித்தது. மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம், 0.9 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது. நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட போன ஆண்டு முழுமைக்குமான தரவுகளில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு முழுமைக்கும், விலையேற்றம் 3.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது. ஒப்புநோக்க, 2024ல் அது 3.9 விழுக்காடாக இருந்தது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, தனியார் வீடுகளின் விலையேற்றம் சென்ற ஆண்டு ஆக மெதுவான வளர்ச்சியைக் கண்டது.
சந்தைக்கு வந்த புதிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் வட்டி விகிதம் குறைந்ததும் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.
தரை வீடுகளின் விலைகள் போன ஆண்டின் இறுதிக் காலாண்டில் 3.4 விழுக்காடு கூடின. தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலைகள் 0.2 விழுக்காடு குறைந்தன. ஆண்டு முழுமைக்கும் தரை வீடுகளின் விலைகள் 7.6 விழுக்காடு உயர்ந்தன. தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலைகள் 2.3 விழுக்காடு அதிகரித்தன.
தனியார் அடுக்குமாடி வீடுகளைப் பொறுத்தவரை, முக்கிய வட்டாரத்தில் விலைகள் நான்காம் காலாண்டில் 3.5 விழுக்காடு சரிவைச் சந்தித்தன.
மாறாக, மூன்றாம் காலாண்டில் அவற்றின் விலைகள் 1.7 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தன.
நகர்ப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் தனியார் வீடுகளின் விலைகள் 0.7 விழுக்காடு கூடின. அதே நேரம், புறநகர்ப் பகுதிகளில் அவை ஒரு விழுக்காடு அதிகரித்தன.
தொடர்புடைய செய்திகள்
வாடகைச் சந்தையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு வாடகைக் குறியீடு, 0.5 விழுக்காடு குறைந்தது.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு, காலாண்டு அடிப்படையில் வீட்டு விலை குறைந்தது அதுவே முதன்முறை. சென்ற ஆண்டு முழுமைக்கும் வாடகை 1.9 விழுக்காடு கூடியது. அதற்கு முந்திய ஆண்டு வாடகை 1.9 விழுக்காடு குறைந்திருந்தது.
சென்ற ஆண்டு முழுமைக்கும் விற்பனையான தனியார் வீடுகளின் எண்ணிக்கை 10,815. அதுவே 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகம். 2024ஆம் ஆண்டில் விற்கப்பட்ட தனியார் வீடுகளின் எண்ணிக்கை 6,467.

