சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை சென்ற மாதம் (மார்ச்) ஆண்டு அடிப்படையில் 78.3 விழுக்காடு கூடியுள்ளது.
கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 1,300 தனியார் வீடுகள் கைமாறின. முந்திய ஆண்டில் 729 வீடுகள் விற்பனையாயின.
கடந்த மாதம் விற்கப்பட்ட எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் தவிர்த்த தனியார் வீடுகளின் எண்ணிக்கை இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கிற்கும் அதிகம்.
பிப்ரவரியில் 246 வீடுகள் விற்பனையாயின. நகர மறுசீரமைப்பு ஆணையம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது மார்ச்சில் 1,937 வீடுகள் விற்கப்பட்டன. கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,510ஆக இருந்தது.
புதிய கூட்டுரிமை வீட்டுத் திட்டங்களின் பெரும்பாலான வீடுகள் விற்கப்பட்டது அதற்கு முக்கியக் காரணம்.
ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ரிவர் மாடர்ன் கூட்டுரிமைத் திட்டத்தில் மொத்தம் 455 வீடுகள். அவற்றில் ஏறக்குறைய 90 விழுக்காட்டு வீடுகள் விற்கப்பட்டன. தெம்பனிசில் ரிவெல் தெம்பனிஸ், பைனெரி ரெசிடென்சஸ் ஆகிய இரண்டு திட்டங்களில் மொத்தமுள்ள வீடுகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவை விற்பனையாயின.
நான்கு மாத மெதுவடைவுக்குப் பின்னர் மார்ச்சில் தனியார் வீடுகளின் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது. சென்ற ஆண்டிறுதியிலும் வழக்கமான சீனப் புத்தாண்டுக் காலத்திலும் அது மெதுவடைந்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் மாத நிலவரம், இவ்வாண்டின் முதல் காலாண்டுக்கான விற்பனை நிலையைச் சற்று மேம்படுத்தியது. முதல் காலாண்டில் 2,012 புதிய தனியார் வீடுகள் விற்பனையாயின.
ஆயினும் அது முந்திய காலாண்டைக் காட்டிலும் 31.6 விழுக்காடும் ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டைவிட 40.4 விழுக்காடும் குறைவு என்ற மொகல் டாட் எஸ்ஜி இணையத்தளத்தின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மாக், இவ்வாண்டின் முதல் காலாண்டில் 2,012 புதிய தனியார் வீடுகள் விற்பனையாயின என்றார்.
குறைந்தது $2 மில்லியனுக்கு விற்கப்பட்ட எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கையும் கூடியது. போன மாதம், கிட்டத்தட்ட 275 வீடுகள் குறைந்தது $2 மில்லியனுக்கு விற்பனையாயின. முந்திய உச்சமான கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் விற்கப்பட்ட 150 வீடுகளைவிட அது அதிகம் என்று ரியலைன்சின் தலைமை ஆய்வாளர் கிறிஸ்டீன் சுன் தெரிவித்தார்.
கூட்டுரிமை, தனியார் வீட்டு விற்பனையில் மத்திய வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதி முன்னணியில் இருந்தது. மார்ச் மாத விற்பனையில் அதன் பங்கு 51. 2 விழுக்காடு.
அதற்கு அடுத்த நிலையில் முக்கிய மத்திய வட்டாரம். இறுதியாக, மத்திய வட்டாரத்தின் எஞ்சிய பகுதி, தனியார் வீடுகளின் விற்பனையில் மூன்றாம் நிலையில் வந்தது.

