2027ஆம் ஆண்டு பெரிய அளவில் விற்பனைக்கு வரும் தனியார் வீடுகள்

2027ஆம் ஆண்டு பெரிய அளவில் விற்பனைக்கு வரும் தனியார் வீடுகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Oct 2026 - 4:37 pm

2 mins read

சிங்கப்பூரில் வீடு வாங்க விரும்புவோருக்கு 2027ஆம் ஆண்டு கூடுதல் தெரிவுகள் கிடைக்கவிருக்கின்றன.

அடுத்த ஆண்டு ஆகப் பெரிய அளவிலான தனியார் வீடுகளை மேம்பாட்டாளர்கள் விற்பனைக்கு விட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது அதுபோன்ற பெரிய அளவில் தனியார் வீடுகள் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுக்கும்மேல் ஆகிவிட்டது.

ஐந்து எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உள்பட 30க்கும் அதிகமான திட்டங்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்குத் தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஏறக்குறைய 16,800 புதிய வீடுகள் இருக்கும் என்று ரியலயன் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் கிறிஸ்டின் சன் கூறினார்.

எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர 2027ஆம் ஆண்டு 14,800 வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. இதற்குமுன் 2013ஆம் ஆண்டில் இதுபோல ஆக அதிக வீடுகள் விற்பனைக்கு வந்தன. அப்போது கிட்டத்தட்ட 15,885 வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ரியலியன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான சந்தை முன்னுரைப்பு அறிக்கையின்படி, 14,800 புதிய வீடுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை அதாவது 8,424 வீடுகள் மத்திய வட்டாரத்திற்கு வெளியில் அமைந்திருக்கும்.

மேலும் 3,434 வீடுகள் மத்திய வட்டாரம் அல்லது நகர மையத்தைச் சுற்றி அமைந்திருக்கும் என்றும் 2,943 வீடுகள் மத்திய வட்டாரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

மத்திய வட்டாரத்தில் உள்ளவற்றைவிட புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளின் விலை குறைவாக இருப்பதால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலிருந்து தனியார் வீடுகளுக்கு மாற விரும்புவோர் அதைப் பெரும்பாலும் வரவேற்பர் என்று திரு சன் சுட்டினார்.

ஐந்து கூட்டுரிமை வீட்டுத் திட்டங்களில் உள்ள 2,000 வீடுகள் இளம் தம்பதிக்குக் கூடுதல் தெரிவுகளைத் தர முடியும் என்றார் அவர்.

ஒருசில திட்டங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று சன் விவரித்தார். அவற்றுள், பே‌ஷோர் டிரைவ்வில் 1,280 வீடுகள் கொண்ட திட்டம், லென்டோர் சென்டிரலில் உள்ள லென்டோர் சிக்னேச்சர், ஹவ்காங் சென்ட்ரல் ரெசிடன்சிஸ் ஆகியவை அடங்கும்.

2027ஆம் ஆண்டு ஏறக்குறைய 15,000 வீடுகளுக்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முன்னதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், அதிக அளவில் அறிமுகமாகும் தனியார் வீடுகளால் கூட்டுரிமை வீடுகளில் தற்போது வசித்துவருவோருக்கு அதை விற்பதில் சிரமம் ஏற்படலாம் என்று சொத்துச் சந்தை வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்