இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை உயர்வு மெதுவடைந்தது

இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை உயர்வு மெதுவடைந்தது

1 mins read
e07748e3-a02e-4c53-a663-e2f9af84f909
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தனியார் வீட்டு விலை 1.1 விழுக்காடு அதிகரித்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது. - பிசினஸ் டைம்ஸ்

இரண்டாம் காலாண்டில் தனியார் வீடுகளின் விலை உயர்வு மெதுவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமானக் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருந்ததும் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், போதிய எண்ணிக்கையில் புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதையும் பொருளியல் குறித்த கண்ணோட்டத்தில் நிச்சயமற்றதன்மையையும் அவர்கள் சுட்டினர்.

இந்த ஆண்டின் (2024) இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்தத் தனியார் வீட்டு விலை 1.1 விழுக்காடு அதிகரித்தது.

ஒப்புநோக்க, முதல் காலாண்டில் அது 1.4 விழுக்காடு கூடியது. 2023ன் நான்காம் காலாண்டில் அது 2.8 விழுக்காடு உயர்ந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் ஜூலை 1ஆம் தேதி வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பாதியில் ஒட்டுமொத்த வீட்டு விலை 2.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் இதே காலகட்டத்தில் அது முறையே 3.1 விழுக்காடாகவும் 4.2 விழுக்காடாகவும் பதிவானது.

இரண்டாம் காலாண்டில் தரை வீடுகளின் விலை உயர்வு மெதுவடைந்ததாகக் கூறிய ஆய்வாளர்கள் விற்பனைக்கு விடப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும் கூறினர்.

பொதுவாக, புதிய தனியார் வீடுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதை அவர்கள் சுட்டினர். இவ்வாறு புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததால், வீடு வாங்குவோர் மறுவிற்பனைச் சந்தையை நாடியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்