சிங்கப்பூரில் தனியார் வாடகை கார்களை வாங்கும் தனிநபர்களுக்கும் வாகனக் கடன் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றன.
நிதி தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) முதல் நடைமுறைக்கு வருகிறது.
போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம், எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
இனி தனிநபர்களுக்கும் ஏனைய தனியார் கார் வாங்குபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பொருந்தும். அவர்களின் கடன் தவணைக் காலம் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும்.
வரிக்கு முந்தைய அடிப்படை விலையான சந்தை மதிப்பு $20,000 அல்லது அதற்குக் குறைவாக உள்ள கார்களுக்குக் கொள்முதல் விலையில் 70 விழுக்காடு வரை கடன் பெறலாம். சந்தை மதிப்பு $20,000க்கு அதிகமான கார்களுக்கு அதிகபட்சக் கடன் வரம்பு 60 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
வாடகை கார்ச் சேவை வழங்கும் நோக்கமின்றித் தனிநபர்கள் கார்களைப் பதிவுசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாதம் கிட்டத்தட்ட 500 பேர் தளர்வான கடன் விதிமுறைகளைப் பயன்படுத்த இவ்வாறு பதிவுசெய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய ஓட்டுநர்கள் நிதி விவேகத்தைக் கடைப்பிடிப்பதை இந்த நடவடிக்கை உறுதிசெய்யும். செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 98,621 தனியார் வாடகை கார்கள் இருந்தன.
அக்டோபர் 30ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகும் கார்களுக்கும் சான்றிதழ் பெறப்படும் கார்களுக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.
நிதி நிறுவனங்கள், உரிமம் பெற்ற கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் பெறும் தனிநபர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தும். வணிக நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் வாடகைக் கார்கள், வணிக வாகனங்கள் ஆகியவற்றிற்கு இதிலிருந்து விலக்கு நீடிக்கும்.
தனியார் வாடகை கார்களுக்குத் தனிப் பிரிவு உருவாக்குவது வாடகைக் கட்டணங்களை உயர்த்தும் என்பதால் அரசாங்கம் அதனைத் தவிர்த்தது. அதேவேளையில், இப்புதிய நடைமுறையால் உண்மையான வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று தேசியத் தனியார் வாடகை வாகனச் சங்க ஆலோசகர் இயோ வான் லிங் கவலை தெரிவித்துள்ளார்.
