லண்டன்/ வாஷிங்டன்: காஸாவில் நிகழ்ந்த இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலக நாடுகளில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த அதேவேளை, ஹமாஸ் தரப்பின் தாக்குதலில் ஈராண்டுக்கு முன் அக்டோபர் 7ஆம் தேதி மாண்ட இஸ்ரேலியர்களுக்கு நினைவஞ்சலிப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் பரிந்துரைக்கு ஏற்ப காஸா போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற்ற நிலையில் சிட்னி, இஸ்தான்புல், லண்டன், வாஷிங்டன், நியூயார்க் நகர், பாரிஸ், ஜெனிவா, ஏதென்ஸ், ஸ்டோக்ஹோம் ஆகிய பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் திரண்டனர்.
காஸாவில் நிலவும் மனிதநேய நெருக்கடிகளையும் மரணங்களையும் எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால் அதுவே ஹமாஸ் தரப்புக்கு ஆதரவாகத் தென்பட்டுவிடக்கூடாது என்று பாலஸ்தீனர்களுக்கு ஆதரவானோரிடம் அரசியல்வாதிகள் எச்சரித்தனர்.
அக்டோபர் 7ஆம் தேதி, 2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 250க்கும் அதிகமானோரை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பிணை பிடித்தனர்.
ஹமாசால் பிணை பிடிக்கப்பட்ட கடைசி அமெரிக்கக் கைதி என்று நம்பப்படும் ஈடன் அலெக்சாண்டரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இஸ்ரேலியப் பிணையாளிகளின் குடும்பங்களுடன் இணைந்து மாண்டோருக்குத் துக்கம் அனுசரித்தனர்.
இந்நிலையில், ‘காஸா ரத்தம் சிந்துகிறது’, ‘அமெரிக்கா, இஸ்ரேலின் கைகள் சிவந்துள்ளன’ என்று கூறும் பதாகைகளை நியூயார்க்கில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தினர்.