தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்தியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பதின்மவயதினருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

2 mins read
82be54a8-1978-4e16-b3e5-15a33036404c
பணத்தை பறித்துக் கொண்டு ஓடும் வேலை இளையருக்குத் தரப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 81,000 வெள்ளிக்கு மேல் தொடர்புடைய கத்தியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பதின்ம வயது இளையரை 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுதத்துடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அந்த இளையருக்கு வயது 16.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் ஒரு பகுதியாக அவர் 60 நிமிட நேரம் சமூக சேவைகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணி முதல் காலை 6.00 மணி வரை மூடப்பட்ட அறையில் இருக்க வேண்டும். நன்னடத்தைக் கண்காணிப்பின்போது அவர் நல்லவிதமாக நடந்துகொள்வார் என்று பெற்றோர் 5,000 வெள்ளி உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இளையருக்கு தற்போது 17 வயதாகிறது. ஜனவரியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்

சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டத்தின்படி 18 வயதுக்குக்கீழ் இருப்பதால் அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டில்ட்டன் என்று குறிப்பிடப்படும் ஒருவர் டெலிகிராம் வழியாக வேலை வழங்க முன்வந்தபோது அவருக்குப் பிரச்சினை தொடங்கியது.

பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும் வேலை அவருக்குத் தரப்பட்டது என்று துணை வழக்கறிஞர் டான் ஜிங் மின் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார்.

வேலையை முடித்ததும் பணம் தருவதாக டில்ட்டன் உறுதியளித்திருந்தார். கத்தியைக் காட்டி சம்பந்தப்பட்டவரை மிரட்டவும் அவர் அறிவுறுத்தினார்.

 2023 நவம்பர் 18ஆம் தேதி பொங்கோலுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்த இளையர், 81,060 வெள்ளி பணப்பையை வைத்திருந்த 33 வயது நபரைச் சந்தித்தார். அவரிடமிருந்து பணப் பையை பறித்துக் கொண்டு இளையர் ஓடினார். அந்த நபரும் இளையரை துரத்திக் கொண்டு ஓடினார். அப்போது இளையர் கத்தியைக் காட்டி மிரட்ட முயற்சி செய்தபோது கத்தி கீழே விழுந்துவிட்டது. துரத்திய நபர் இளையரை ஒருவழியாக மடக்கிப் பிடித்தார். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்