கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ), வெளிப்புற விளம்பரங்களுக்கான நடைமுறைகளைச் சீர்ப்படுத்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். இதனால் அந்த வர்த்தகங்களின் நிர்வாகப் பாரம் குறையும் என்றும் அவர் கூறினார்.
உரிம விண்ணப்பங்களுக்கு விரைவிலேயே ஒப்புதல் அளிக்கும் முறை, மறுபடியும் நடைபெறக்கூடிய தற்காலிக நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான சீரமைக்கப்பட்ட விண்ணப்ப முறை ஆகியவை இரண்டாவது அரையாண்டில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
வெளிப்புற விளம்பரங்களுக்கான உரிம ஒப்புதல் முறைகளுக்கு நேரம் அதிகம் ஆவதாக விளம்பர, சந்தைப்படுத்துதல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளதாகத் திரு சீ வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 2) தெரிவித்தார்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான வெளிப்புற விளம்பரங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டிய வர்த்தக உரிமையாளர்கள், விளம்பரங்களுக்கான அளவீடுகளின் விவரங்களைத் தரவேண்டும்.
மறுமுறை நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இந்த விவகாரங்கள் மாறுபடாது. இருந்தபோதும், விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து அதே விவரங்களைத் தரவேண்டும் என்று திரு சீ தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைக் கையாள, துரிதப்படுத்தப்பட்ட உரிம விண்ணப்ப முறையை பிசிஏ கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பதாரர்களுக்கு முதலில் அறிமுகம் செய்யும்.
இந்த எண்ணிக்கையில், வெளிப்புற விளம்பரத்திற்கான உரிம விண்ணப்பங்கள் அடங்கிவிடுவதாகத் திரு சீ தெரிவித்தார். கடை வீடுகள், வர்த்தகக் கட்டடங்கள், குடியிருப்புகளிலும் தொழிற்பேட்டைகளிலும் உள்ள வர்த்தக இடங்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புப் பலகைகளுக்கு இந்த உரிமங்கள் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தவுடன் விண்ணப்பதாரர்கள் தங்களது உரிமங்களை உடனடியாகப் பெறலாம். தற்போதைய விண்ணப்ப முறையைக் காட்டிலும் ஏழு நாள்கள் குறைவான காலகட்டத்தில் அவர்கள் தங்களது விண்ணப்பங்ளைச் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மறுபடியும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அடையாளம் காணப்படுவதுடன் முந்தைய விண்ணப்பப் படிவங்களிலுள்ள விவரங்கள் புதிய படிவங்களில் நிரப்பப்படும் என்று திரு சீ கூறினார்.
நூற்றுக்கணக்கான வெளிப்புற விளம்பரங்களைப் பயன்படுத்தும் எஃப்1, ஐலைட், கேஸ்ட்ரோ பீட்ஸ் உள்ளிட்ட பெருநிகழ்ச்சிகள் இதனால் பயனடையும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றங்களை ஆதரிப்பதற்காகத் தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் பிசிஏ, மாற்றங்களை இவ்வாண்டின் பிற்பாதியில் செயல்படுத்தும்.


